அதாஉல்லாவின் ஆடையும், ‘சுகமில்லாத’ வேலையும்

🕔 September 22, 2020

– மப்றூக் –

நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான வகையில் ஆடை அணிந்து வந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்ட தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா – மீண்டும் சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.

அதாஉல்லா அணிந்து வந்த ஆடை – நாடாளுமன்ற சம்பிதாயத்துக்கு முரணானது என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அதனால்தான் அவர் அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அப்படியென்றால் அவர் எப்படி மீண்டும் சபை அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார் என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

இதற்கான பதிலை, நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ இன்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டிய ஆடை குறித்து அனைவருக்கும் விதியொன்று உள்ளது. குறித்த உறுப்பினர் அந்த விதி முறைக்கு மாற்றமாக உடை அணிந்து வந்தமையினாலேயே இந்த பிரச்சினை எழுந்தது. அந்த உறுப்பினருக்கு இன்று சுகயீனம் என்பதால் இன்று மாத்திரம் அவர் அணிந்து வந்த ஆடையுடனேயே சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் எனக்கு உறுதிப்படுத்தினார்” என, படைக்கல சேவிதர் ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா மேற்படி ஆடையுடன் இன்று நாடாளுமன்றத்துக்கு வந்தமை குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இங்கு சில கருத்துக்களையும், அவதானங்களையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

சர்ச்சையொன்றை ஏற்படுத்த வேண்டும் எனும் எண்ணத்துடனேயே இவ்வாறான ஓர் ஆடையை அதாஉல்லா அணிந்து வந்திருக்க வேண்டும். ஊடகங்கள் மற்றும் நாட்டு மக்களின் கவனத்தை தன்மீது குறிப்பதற்காகவே அவர் அதனைச் செய்திருக்கின்றார்.

நாடாளுமன்றத்துக்கு உடுத்து வர வேண்டிய சம்பிரதாய உடை தொடர்பில் அதாஉல்லாவுக்கு போதியளவு தெளிவு இருக்கும் என நாம் நம்புகிறோம்.

எனவே நாடாளுமன்றத்திலிருந்து அதாஉல்லா வெளியேற்றப்பட்டமை நியாயமான நடைமுறையாகும்.

ஆனால், அவருக்கு சுகமில்லை எனக்கூறி, அவரை மீண்டும் சபை அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதித்தமை விமர்சனத்துக்குரியதாகும்.

அதாஉல்லாவை அந்த ஆடையுடன் இன்று சபாநாயகர் அனுமதித்தமையும், அதற்குக் கூறப்பட்ட காரணமும் பக்கச்சார்பானதாகவே பார்க்கப்படுகிறது.

இனி, சுகயீனமுற்றுள்ள ஒருவர் நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணான வகையில் ஆடை உடுத்திக் கொண்டு, சபை அமர்வில் கலந்து கொள்ள முடியும் என்கிற தவறான ஒரு கற்பிதத்தை, அதாஉல்லா தொடர்பில் சபாநாயகர் எடுத்த முடிவு ஏற்படுத்தியுள்ளது.

சரியாகச் சொன்னால், அதாஉல்லா இன்று நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் வகையில் ஆடை அணிந்து சென்று, அவர் சார்ந்த சமூகத்தினரை தலைகுனிய வைத்திருக்கிறார்.

முஸ்லிம்களுக்கெதிரான மனநிலையினைக் கொண்ட பேரினவாதிகள், இன்று அதாஉல்லாவைப் பார்த்து ஐ.எஸ்.ஐ.எஸ். என கூக்குரல் இட்டமையானது கேவலமான செயற்பாடாக இருந்த போதிலும், அதற்கான சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே அதாஉல்லா ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, துருக்குத் தொப்பிக்கான உரிமைக்காக போராடி, அதனை முஸ்லிம் முன்னோர்கள் பெற்று கொடுத்ததைப் போல, அதாஉல்லாவும் இன்று நாடாளுமன்றத்துக்கு ‘வேறொரு வகையான’ ஆடையை அணிவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார் என்று, அவரின் தீவிர ‘பக்தர்கள்’ சமூக வலைத்தளங்களில் கோஷமிடுவதெல்லாம் பரிதாபத்துக்குரியதாகும்.

“அதாஉல்லாவுக்கு சுகமில்லை; அவர் இன்று மட்டும் அந்த ஆடையை அணிந்து கொண்டு – சபை அமர்வில் கலந்து கொள்ள முடியும்” என சபாநாயகர் தெரிவித்திருக்கும் விடயத்தை, அதாஉல்லாவின் பக்தர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இப்படி ‘சுகமில்லாத’ வேலைகளைச் செய்வதிலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்து கொள்வதுதான், இப்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு – அவர்கள் செய்கின்ற நலவுகளில் ஒன்றாக இருக்கும் என்பது நமது கருத்தாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்