20ஆவது திருத்த சட்டமூல வரைவு, நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது

🕔 September 22, 2020

ரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூல வரைவை நீதியமைச்சர் அலி சப்ரியி – இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார்.

இம்மாதம் 02 ஆம் திகதி, உத்தேச 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், 03ஆம் திகதி அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

இந்த நிலையில், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவுக்குகு எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன், ஆளுந்தரப்புக்குள்ளும்20ஆவது திருத்த வரைவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, 20ஆவது திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக பிரதமரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

ஆளுந்தரப்புக்குள் ஏற்பட்ட இணக்கமின்மை காரணமாக, 20 ஆவது திருத்தச் சட்டமூல வர்த்தமானியை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல், புதிய வர்த்தமானியை வெளியிடுவதற்கும் எதிர்பார்க்கப்பட்டது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் உரையாற்றியிருந்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட், 20ஆம் திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பில் கரிசனை வெளியிட்டிருந்தார்.

எவ்வாறிருப்பினும், 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு தொடர்பான பணியானது, முழுமையான ஜனநாயக முறைமையூடாக இடம்பெறும் என்று, ஜெனிவா கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி தயானி மெண்டிஸ் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணிக்கு மத்தியில், பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், மாற்றங்கள் எதுவுமின்றி, அந்த வர்த்தமானி தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு, இன்றைய தினம் முதலாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதன் பின்னர், அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றம் செல்ல வேண்டுமாயின் அதற்காக 07 நாட்கள் வழங்கப்படும்.

அவ்வாறு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால், நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 03 வாரகாலப்பகுதி வழங்கப்படும்.

நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னரே இரண்டாம் வாசிப்புக்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்