இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை

🕔 September 1, 2020

லங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி மூலம் (toss) நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் நிலை ஏற்படவுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியாத நிலை ஏற்படுமாயின், அவருக்குப் பதிலீடாக, ஒருவரை நாணயச் சுழற்றி மூலம் நாடாளுமன்மன்ற உறுப்பினராக தேர்வு செய்ய வேண்டியேற்படும்.

ரத்னபுரி மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரேமலால் ஜயசேகர 104,237 வாக்குகளைப் பெற்று, இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குளைப் பெற்றிருந்தார்.

ஆயினும் மரண தண்டனைக் கைதியான பிரேமலால், சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது என, சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

எனவே, பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு நாடாளுமன்றுக்கு தெரிவாகாத வேட்பாளர்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒருவரையே, பிரேமலால் ஜயசேகரவின் இடத்துக்கு பதிலீடு செய்ய வேண்டியேற்படும்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகாதோரில் அதிகூடிய விருப்பு வாக்குகளை சம தொகையில் பெற்ற இருவர் பொதுஜன பெரமுன பட்டியலில் உள்ளனர். அவர்கள் இருவரும் தலா  53,261 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ரஞ்சித் பண்டார மற்றும் ரோஹன கொடிதுவக்கு ஆகியோரே இவ்வாறு சம தொகை விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

எனவே, பிரேமலால் ஜயசேகரவுக்கு பதிலீடாக பொதுஜன பெரமுன பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்யவேண்டி ஏற்பட்டால், நாணயச் சுழற்றி மூலமாகவே அதனை நிறைவேற்ற வேண்டியேற்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார்.

ரத்தினபுரி மாவட்டத்துக்குப் பொறுப்பான தெரிவத்தாட்சி அலுவலர், இந்த நாணயச் சுழற்சியை பொறுப்பேற்று நடத்துவார் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்