தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு எம்.பி. பதவி வழங்கப்பட வேண்டும் என்கிறார் நஸீர்

🕔 August 8, 2020

– அஹமட் –

தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் தனக்கு மூன்று வருடங்களுக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பதவியை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் வழங்க வேண்டும் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட நஸீர், தோல்வியடைந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனது சொந்த ஊர் அட்டாளைச்சேனையில் தன்னுடைய ஆதரவாளர்களைச் சந்தித்து பேசிய நஸீர் – இந்த வேண்டுகோளினை முன்வைத்தார்.

முன்னைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நஸீர் இரண்டு வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்று நஸீர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசும் போது; “முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் – மக்கா நகரில் வைத்து ஒரு தடவை கூறிம் போது, அட்டாளைச்சேனைக்கு 05 வருடங்களுக்கு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றப் பதவி தருவேன் என்றார். அதற்கிணங்க, மிகுதி 03 வருடங்களையும் இப்போது தரவேண்டும்” என்று கூறினார்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச மத்திய குழுவினர்தான்நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குமாறு தனக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறிய நஸீர்; அவருக்கு நடந்த அநியம் பற்றி மு.கா. தலைவருக்கு விளங்கப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அந்தச் சந்திப்பின் போது; தேர்தலில் உட்கட்சி சதி மூலம் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும், தனது தோல்விக்கு பிரதான காரணம் மு.காங்கிரஸ் தலைவர்தான் என்றும் நஸீர் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அதனை மீறி – தமக்குக் கிடைத்த 07 தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளுக்கும் ஆட்களை அந்தக் கட்சி நியமித்து விட்டதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, தேர்தலில் தோல்வியுற்ற எந்த ஒரு நபருக்கும் கட்சியின் தேசியப் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனக் கூறியுள்ளார்.

வீடியோ

தொடர்பான செய்தி: எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்