196 கொரோனா தொற்றாளர்கள், ஒரே தடவையில் அடையாளம் காணப்பட்டனர்

🕔 July 10, 2020

நாட்டில் மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த நிலையில் இதுவரை கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் 252 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் கைதிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் இதுவரை 338 பேரின் முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பி.சி.ஆர் பரிசோதனை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 196 தொற்றாளர்களை தொடர்ந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின எண்ணிக்கை 2350 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 1979 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, கொரோனா தொற்றுக்காக 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்