ஹாபிஸ் நசீர் ஒரு டம்மி: மு.கா. தலைவரை வைத்துக் கொண்டு, விளாசித் தள்ளிய அலிசாஹிர் மௌலானா: ஏறாவூரில் சம்பவம்

🕔 July 9, 2020

– முன்ஸிப் –

திர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஹாபிஸ் நஸீரை, ஒரு ‘டம்மி’ என்று, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்பாக, அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மற்றொரு வேட்பாளரான அலிசாஹிர் மௌலானா சாடினார்.

அலிசாஹிர் மௌலானாவின் ஏறாவூர் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவரின் ஊரைச் சேர்ந்த சக வேட்பாளர் ஹாபிஸ் நசீர் குறித்து அலிசாஹிர் மௌலானா இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு ஹாபிஸ் நஸீர் குறித்து தெரிவிக்கையில்;

“இந்தப் பாராளுமன்றத் தேர்தல் எனக்கு கடைசித் தேர்தலாக இருக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், இந்தப் பதவியை பாரம் கொடுப்பதென்றால், இப்படிப்பட்ட ஊழல் பேர்வழிகளுக்கு ஒரு காலமும் கொடுக்க மாட்டோம்.

அடுத்து வரும் மாகாண சபைத் தேர்தலில் எமது கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஆசனம் வழங்குபவர் எமது தலைவர்தான். ஆனால் இங்கு ஒருத்தர் ஏலம் போடுகிறார். அடுத்த மாகாண சபையில் நீங்கள்தான் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான உறுப்பினர் என்று சிலரிடம் கூறுகிறார். அதை நம்பிக் கொண்டு சில பொடியன்மார் பின்னால் போகிறார்கள்.

வழமையாக ஒரு எம்.பி. இருக்கும் ஊரில், அதே கட்சியில் போட்டியிடுவதற்கு ஒரு டம்மியைத்தான் போடுவார்கள். அது டம்மிதான், ஆனால் கொஞ்சம் கொக்கரிக்கிறது. நமது ஊரில் மட்டுமன்றி அடுத்த தொகுதிக்கும் போய் பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

இந்த நிலைமை நமது தலைவர் அவர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலைதான்” என்றார்.

இங்க பேசிய மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்;

“இந்தக் கட்சி பலரை அலங்கரித்திருக்கிறது. இந்தக் கட்சிக்கு அலங்காரமாக இருப்பவர்களில் அலிசாஹிர் மௌலானாவும் ஒருவர்.

அலிசாஹிர் மௌலானா என்ற பாத்திரம் – பாராளுமன்றத்தில் இருந்தாக வேண்டிய பாத்திரம். அது சும்மா பிச்சைப் பாத்திரமல்ல. தங்கப் பாத்திரம். அந்த இடத்தை யாரும் லேசில் எட்டிப்பிடிக்க முடியாது.

தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்தில் அலிசாஹிர் மௌலானா என்னோடு இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்றார்.

வீடியோ

Comments