அக்கரைப்பற்று பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி நிர்மாண ஒப்பந்தகாரராக செயற்பட்டுள்ளார் என, முறைப்பாடு: மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 July 2, 2020

– அஹமட் –

க்கரைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர், அந்தப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்தகாரராகச் செயற்பட்டுள்ளார் என்றும், குறித்த வீதி நிர்மாணங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையிடப்பட்டுள்ளது.

குறித்த தொழிநுட்ப உத்தியோகத்தர் தனது மனைவியினுடைய சகோதரியின் பெயரிலுள்ள நிறுவனமொன்றின் பெயரிலே சம்பந்தப்பட்ட வீதி நிர்மாணங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு மற்றும் ஆலிம்நகர் ஆகிய கிராமங்களில் 2019ஆம் ஆண்டு ‘கிராம சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வீதிகளிலே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக, அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி வீதி நிர்மாணத்துக்கான ஒப்பந்தத்தை குறித்த தொழிநுட்ப உத்தியோகத்தர், தனது மனைவியின் சகோதரியினுடைய பெயரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் ஊடாகச் செய்துள்ள நிலையில் – அந்த வீதிகளுக்கான மதிப்பீடு, மேற்பார்வை போன்றவற்றையும் அதே தொழில்நுட்ப உத்தியோகத்தரே மேற்கொண்டுள்ளார் என்றும், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்ட வீதி நிர்மாணப் பணிகளின் பின்னர் காட்சிப்படுத்தப்படும் வீதிக்கான செலவு விபரம் அடங்கிய பெயர்ப்பலகைகள் இதுவரை இடப்படவில்ல என்றும், ஆனால் அவற்றுக்குரிய கொடுப்பனவுகள் உட்பட பிடிகாசுக் கொடுப்பனவுகளும் விடுவிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் – பள்ளிக்குடியிருப்பு இரண்டாம் குறுக்குவீதி நிர்மாணத்தின் போது 37.6 மீற்றர் கியுப் கிறவல் மண் இடப்பட்டதாக குறிப்பிட்டு 84496.80 ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவ்வீதியில் அப்படி எந்தவிதமான கிறவல்களும் போடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் கடமையாற்றும் மேற்குறிப்பிட்ட தொழிநுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட எந்தவொரு வீதிக்கும் இரு மருங்கிலும் போடப்படுகின்ற கிறவல் இடப்படாமலும், பெயர்ப்பலகைகள் காட்சிப்படுத்தப்படாமலும் அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனத்தினால் ஒப்பந்த வேலைகளை மேற்பார்வை செய்வதற்கு நியமிப்புச் செய்யப்பட்ட இவ் உத்தியோகத்தர், ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டு, அரசாங்கத்துக்கு பிழையான தகவல்களை வழங்கி அரச நிதியை மோசடி செய்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்