கோட்டாவுக்கு அமெரிக்காவின் நலன்தான் முக்கியமாக உள்ளது: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

🕔 June 11, 2020

“இலங்கை இன்னும் ஐந்து வருடங்களுக்குள் அமெரிக்காவின் மாநிலமாக மாறிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது. ஏனெனில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை மக்களை விடவும் அமெரிக்காவை நேசிக்கிறார். அவர்களுக்கு விசுவாசமாக செயற்படுகின்றார்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புகளை நிவர்த்தி செய்வதையையே நோக்காகக்கொண்டு கோட்டாபய செயற்படுகின்றார் எனவும் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார். 

அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை பொலிஸார்  கடுமையான முறையில் கட்டுப்படுத்தியமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“யுத்த காலத்தில் ராணுவத்தை விட்டு விட்டு அமெரிக்காவுக்குச் சென்ற ஜனாதிபதி கோட்டாபாய – அவருடைய சகோதரன் ஜனாதிபதியானதும் நாடு திரும்பினார்.

தனது ஜனாதிபதி சகோதரனுக்கு தெரியாமலேயே அமெரிக்காவுடன் ‘மிலேனியம் செலஞ்சஸ்’ ஒப்பந்தத்தை இரகசியமாக செய்திருந்தார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு ‘முன்னர் மிலேனியம் செலஞ்சஸ்’ திட்டம் இலங்கைக்கு ஆபத்தானது அதனை இல்லாமல் செய்வேன் என கோட்டாவும் பொதுஜன பெரமுனவினரும் கூறி வந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் அவர்களின் பேச்சு மாறிவிட்டது. ‘மில்லேனியம் செலஞ்சஸ்’ திட்டத்தில் பல நன்மைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். 

அதேபோல நேற்று முன்தினம் – முன்னிலை சேசலிச கட்சியினர் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். எனினும் நீதிமன்ற தடையுத்தரவென்றை அரசாங்கம் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

அமெரிக்காவில் கருப்பின பிரஜையொருவரை அந்நாட்டு பொலிஸாரால் கொல்லப்பட்டமையை எதிர்த்தே கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆக அநீதிக்கெதிராக குரல் எழுப்புவதற்கு இலங்கையில் அனுமதி மறுக்கப்படுகின்றமை தெளிவாகிறது.

அத்தோடு அமெரிக்காவின் அராஜகங்களுக்கு இந்த அரசாங்கம் ஆதரவளிப்பதையும் ஒத்துழைப்பு வழங்குவதையும் காண்கிறோம். இது இலங்கையின் எதிர்காலத்திற்கு மிக மோசமான செய்தியை சொல்கிறது. 

முன்னர் ஐக்கிய தேசியக் கட்சிதான் அமெரிக்க ஆதரவு போக்கை கடைபிடிப்பதாக குற்றச்சாட்டுகளை ராஜபக்ஷாக்களும் அவர்கள் சார்ந்தோர்களும் தெரிவித்து வந்தனர். இன்று அவர்களும் அமெரிக்க சார்பானவர்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கின்றனர். 

அமெரிக்காவில் கருப்பின பிரஜையொருவருக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட அராஜகம் கண்டிக்கத்தக்கவை. அதேபோன்று இந்நாட்டிலும் அராஜகத்துக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை பொலிஸார் மிக மோசமாக நடத்தியதையும் கண்டிக்கிறோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்