பாலமுனை சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்ததால் சிறுவன் பாதிப்பு; உரிய முறையில் நிர்மாணிக்காததால் வந்த வினை

🕔 May 28, 2020

பாலமுனை கடற்கரை சிறுவர் பூங்காவிலுள்ள விளையாட்டு சாதனம் உடைந்து விழுந்தமையினால், அதில் விளையாடிய சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

குறித்த பூங்காவும் அங்குள்ள விளையாட்டு சாதனங்களும் உரிய முறைப்படி அமைக்கப்படாமை காரணமாகவே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தலையில் அடிபட்டுள்ளதோடு காலும் முறிந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் 1990 அவசர இலக்க அம்பியுலன்ஸ் வண்டியை அழைத்து, சிறுவனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் நிர்மாணிக்கப்படவேண்டிய பாலமுனை சிறுவர்பூங்கா, எவ்வித பராமரிப்பும் அற்ற நிலையில் சேதமுற்றுக் காணப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் 15ம் திகதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தொடர்பு கொண்ட பிரதேச சபையின் தவிசாளர்; உடனடியாக மேற்படி சிறுவர் பூங்காவை புனரமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கியதாகவும், ஆனால் இதுவரை எந்தவித புனரமைப்பும் நடைபெறவில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகின்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பிரதேச சபையின் அபிவிருத்திகள் முறைப்படுத்தப்பட்டதாக, நேர்த்தியானதாக அமைதல் அவசியம் எனத் தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பெரும்பாலான அபிவிருத்தி நடவடிக்கைகள் கட்சி அரசியல் மயப்பட்டதாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இன்றைய தினம் சிறுவன் விபத்குள்ளான மேற்படி பூங்கா நிர்மாணத்தில் பல்வேறு ஊழல், மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்