தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 May 22, 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் – வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி டி சில்வா, இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அம்மனுக்களில், எவ்வித அடிப்படையோ, சட்டபூர்வமான செல்லுபடியாகும் தன்மையோ இல்லாததால், குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலே தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் சார்பில் அவர் மன்றில் வேண்டுகோள் விடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி ஆகியவற்றிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை 05ஆவது நாளாக உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, சிசிரா டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதேவேளை, தற்போதுள்ள தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு அமைய தேர்தல் பணிகளை மேற்கொள்ள முடியும் என, சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவினால் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வழங்கிய குறித்த கடிதத்தையும் இன்று (22) மன்றில் சமர்ப்பித்தார்.

குறித்த அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் தேர்தல் ஆணைக்குழு – தேர்தலை மீண்டும் ஒத்திவைத்தமை பிரச்சினைக்குரிய விடயமாகும் என, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்