ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

🕔 May 17, 2020

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது.

ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தலைமையில், இந்த விடயம் தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதால், தாங்களும் வழக்கொன்றை தாக்கல் செய்ய வேண்டிய சங்கடமானதொரு நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தள்ளப்பட்டார்.

ஆனாலும், இந்த விடயத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், வாக்குக் கணக்குப் பார்த்தே செயற்பட்டுள்ளார் என்பதுதான் அவமானகரமான செய்தியாகும்.

ஹக்கீமுடைய இந்த ‘ஜனாஸா அரசியல்’ குறித்தும், இவ் விவகாரத்தில் அவர் கணித்து செயற்பட்ட கேவலமான ‘வாக்குக் கணக்கு’க் குறித்தும் – முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் பின்வருவாறு விவரிக்கின்றார்.

“கண்டியில் கிடைக்க இருக்கும் சொற்ப அளவான சிங்கள வாக்குகளும் அற்றுப் போகும் என்று மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வழக்குத் தொடுநராக இருக்க பயந்துவிட்டார்.

அம்பாறையைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எவரையுமோ, திருமலையின் முன்னாள் எம்.பி தௌபீக்கையோ வழக்குத் தொடுனராக இருக்க அநுமதிக்கவில்லை. ஏனென்றால் அந்த மாவட்டங்களில் கணிசமான சிங்கள வாக்குகள் இருக்கின்றன.

இம்மாவட்டங்களைச் சேர்ந்த மு.கா உறுப்பினர்கள் வழக்கு தொடுநராக இருந்தால் சஜித் அணியின் ‘தொலைபேசி’ சின்னத்துக்கு பாரிய சிங்கள வாக்குச் சரிவு ஏற்படும்.

இது இவ்விரு மாவட்டங்களிலும் எதிர்வரும் தேர்தலில் தெரிவாகும் முஸ்லிம் காங்கிரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை உண்டாக்கும்.

ஆனால் மட்டக்களப்பில் சிங்கள வாக்குகள் மிகக்குறைவு இந்த சொற்ப வாக்குகள் காங்கிரசுக்கு கிடைப்பனவல்ல. இதனால் அலிசாஹிர் வழக்காளியாக்கப்பட்டார்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குள் அலியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்து நஸீர் ஹாபிஸின் தோல்விக்கு அல்லது கல்குடா வேட்பாளரின் தோல்விக்கு வித்திட்டு, மூன்று தேங்கா மாங்காய்களைப் பறிக்கலாம்.

இவையெல்லாம் ‘சுய லாப அரசியல்’ அன்றி, ‘பொது நல போக்கு’ என்று எதனை வைத்து நம்புவது”.

இந்த விடயத்தை மேலும் விளங்கிக் கொள்ள இதையும் படியுங்கள்: ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்