‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம்
திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ள ‘அம்பான்’ சூறாவளி, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த அம்பான் என்ற சூறாவளி, பாரிய சூறாவளியாக விருத்தியடைந்து இன்று அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு திசையில் நகர்ந்து பின்னர் வடக்கு – வடகிழக்குதிசையில் திரும்பி மே 20ஆம் திகதியளவில் மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும்.
இதன் தாக்கம் காரணமாக நாடுமுழுவதும்,குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடுமுழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 150 மி.மீ க்கும்அதிகமான மிகப்பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் – பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.