ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

🕔 May 16, 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) –

னாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமன்றி ஏனையயோரும் மக்களுக்குள் தமது நியாயங்களை எடுத்துச் சொல்ல தவறியிருக்கின்றனர்.

அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் தோல்வியடைந்த பின்னர் மக்கள் மன்றுக்கு செல்வதே பொருத்தமானது. முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாமிய மத நம்பிக்கையாகும். நான் சட்டம் தெரிந்தவனல்ல; ஆயினும் எந்த மதமானாலும் அதன் நம்பிக்கை தொடர்பான ஒரு தீர்ப்பை அடிப்படை மனித உரிமை மீறல் என்று தொடரப்படும் வழக்கில் சாதகமாகப் பெறுவது கடினமாக இருக்கலாம்.

அதுவும் மிக அதிகமான மக்கள் திகிலடைந்திருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், பெரும்பான்மை மக்கள் கூர்ந்து அவதானித்துவரும் ஒரு விடயத்தில் – அம்மக்களின் விருப்புக்கு மாறான தீர்ப்பு ஒன்று எடுப்பது இலகுவாக இருக்குமோ தெரியாது.

கதாநாயகனாகி விட்ட சுமந்திரனும், வில்லன்களாகி விட்ட முஸ்லிம்களும்

ஆனால் இவ்வழக்குகளை தொடுத்தவர்களுக்கு முஸ்லிம் மக்கள் மத்தியில் குறிப்பிட்டளவு செல்வாக்கு ஏற்படும். சூழ்நிலையைப் பொறுத்து இச்செல்வாக்கு சறுக்கவும் கூடும். வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்தாலும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்கனவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிற கோபம் – கோபாவேசமாக அதிகரிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளது.

அதுவும் சுமந்திரன் முன்நிலையாகி வாதாடுகிற வழக்கு என்றால் இந்தக் கோபம் இரட்டிப்பாகவும் ஆகும். சுமந்திரன் முஸ்லிம்களுக்குள் தற்காலிகமாக கதாநாயகன் (ஹீரோ) ஆகி விட்டார். ஆனால் உயிரோடிருக்கும் பல லட்சம் முஸ்லிம்கள் – சிங்களவர் மத்தியில் வில்லன்களாகி விட்டார்கள்.

மட்டுமல்ல இலங்கை சுகாதாரத்தரப்பிடம் நீதிமன்று அபிப்பிராயம் கேட்டு, எரிப்பது அவசியம் என்று தீர்ப்பைத் தந்தால், எரிப்பது நிரந்தரத் தன்மையை அடைந்துவிடுமல்லவா? இப்படி ஆயின் அடுத்தது என்ன?? தெற்கில் ஒவ்வொரு முஸ்லிம் வீட்டின் உள்ளேயும் ‘சீன வெடி’ கொழுத்தி எறியப்பட்டு வெற்றிக்கொண்டாட்டம் நடந்தால், அதனைத் தடுப்பது யார்? அரசாங்கமா, ராணுவமா, வழக்குகளை தாக்கல் செய்தவர்களா, இல்லை வழக்குகளில் ஆஜரான சட்டத்தரணிகளா?

ஹக்கீமின் தந்திரம்

இவ்விடயத்தில் நியாயமாக குரல் கொடுத்த முஸ்லிம் காங்கிரஸ் இதனை நிதானமாகத்தான் கையாண்டு வந்தது. றிஷாத் பதியுதீன் வழக்கு தொடுக்கும் வரைதான் இந்த நிதானம் நின்றுபிடித்தது. தற்போது றவூப் ஹக்கீம் – அலிசாஹிர் மௌலானாவை வைத்து வழக்கை வைத்துவிட்டார். இதனை ‘அரசியல் நகர்வு’ என்று அழைக்காமல், ‘முஸ்லிம் மக்களின் நலன் சார்ந்த நகர்வு’ என்று எப்படி சொல்வது?

கண்டியில் கிடைக்க இருக்கும் சொற்ப அளவான சிங்கள வாக்குகளும் அற்றுப் போகும் என்று மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வழக்குத் தொடுநராக இருக்க பயந்துவிட்டார். அம்பாறையைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எவரையுமோ, திருமலையின் முன்னாள் எம்.பி தௌபீக்கையோ வழக்குத் தொடுனராக இருக்க அநுமதிக்கவில்லை. ஏனென்றால் அந்த மாவட்டங்களில் கணிசமான சிங்கள வாக்குகள் இருக்கின்றன. இம்மாவட்டங்களைச் சேர்ந்த மு.கா உறுப்பினர்கள் வழக்கு தொடுநராக இருந்தால் சஜித் அணியின் ‘தொலைபேசி’ சின்னத்துக்கு பாரிய சிங்கள வாக்குச் சரிவு ஏற்படும். இது இவ்விரு மாவட்டங்களிலும் எதிர்வரும் தேர்தலில் தெரிவாகும் முஸ்லிம் காங்கிரசுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சியை உண்டாக்கும்.

ஆனால் மட்டக்களப்பில் சிங்கள வாக்குகள் மிகக்குறைவு இந்த சொற்ப வாக்குகள் காங்கிரசுக்கு கிடைப்பனவல்ல. இதனால் அலிசாஹிர் வழக்காளியாக்கப்பட்டார். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குள் அலியின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்து நஸீர் ஹாபிஸின் தோல்விக்கு அல்லது கல்குடா வேட்பாளரின் தோல்விக்கு வித்திட்டு, மூன்று தேங்கா மாங்காய்களைப் பறிக்கலாம்.

இவையெல்லாம் ‘சுய லாப அரசியல்’ அன்றி, ‘பொது நல போக்கு’ என்று எதனை வைத்து நம்புவது? எப்படியோ அலியும் பலிதான் என்பதை காலம் நிரூபிக்கும். 2001 ஆம் ஆண்டும் காலம் அவருக்கு ஒரு நிரூபணத்தைச் செய்தது.

சிங்கள மக்களின் மன்றுக்குச் செல்வோம்

இவற்றையெல்லாம் வெல்வதற்கு ‘பெரும்பான்மை மக்கள் மன்றுக்கு’ முன்னால் செல்வதுதான் இப்போதைக்கு இருக்கும் இலகுவான சிறந்த வழியாகும். முஸ்லிம்களுக்கு எதிராகச் செய்யப்படும் பொய்யுரைகளை மெய்யுரைகளால் வெல்லலாம் என்ற நம்பிக்கையோடு களத்தில் இறங்கவேண்டும்.

எனது ஊரில் கிடைத்த வரலாற்றின் அடிப்படையிலும் மற்றும் எனது கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளை வைத்தும் சிங்கள மக்களின் ‘நீதி மன்று’க்கு நான் செல்கிறேன். இவ்வாறு நாட்டின் நாலா பக்கங்களிலும் வாழ்ந்து மறைந்த முஸ்லிம் பெரியார்கள், நாட்டுக்கும் இலங்கை மக்களுக்கும் விசேடமாக சிங்கள மக்களுக்கும் செய்த நன்மைகள் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தூக்கிக்கொண்டு வழமையான வீராய்ப்பு மொழியைத் தவிர்த்து – சண்டித்தன மற்றும் பெருமித சொற்களை தவிர்த்து நீதிமன்ற மொழியைக் கையிலெடுத்து பெரும்பான்மை மக்களின் மன்றுக்கு செல்லலாமே.

இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல வெளிநாட்டு முஸ்லிம்களும் இலங்கைக்கு வந்து நாட்டை ஆக்கிரமித்த வெளிநாட்டு படைகளுக்கு எதிராகப் போராடி தமது இன்னுயிரை ஈந்துள்ளார்கள் என்று எடுத்து சொல்லலாம். துருக்கியை பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி பிரச்சாரம் செய்கிறார்கள். கேரளாவுக்கு இலங்கையில் இருந்து முஸ்லிம் பயங்கரவாதிகள் சென்று வந்தார்கள் என்று கூறுகிறார்கள்.

சிங்கள புதிய பரம்பரையும், நடுத்தர வர்க்கமும், நடுவு நிலையான மேன்மக்களும்கூட புதிய புனை கதைகளைத்தான் கேட்டு மனதில் பதிந்து வைத்துள்ளனர். துருக்கியில் இருந்து படையினர் இங்கு வந்து இலங்கையருடன் சேர்ந்து வெளிநாட்டு படைகளுக்கு எதிராக போராடிய வரலாற்றை, கேரளாவில் இருந்து குஞ்ஞாலி மரைக்காரின் தீரம் மிக்க நன்கு பயிற்றப்பட்ட கடற்படை வந்து போராடி இலங்கையை காப்பாற்றிய வரலாற்றை எல்லாம் தூசி தட்டி எடுத்து சமநிலையான ஊடகங்களின் ஊடாக, சிங்கள மக்களின் நீதி மன்றத்தில் வைக்கவேண்டியது முஸ்லிம் மக்களின் வாக்குகளை அள்ளி எடுக்கின்ற – நன்கு சரளமாக சிங்களம் பேசக்கூடிய கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னணி உறுப்பினர்களின் கடமையல்லவா?

சில சிங்கள ஊடகங்களில் நாளொன்றுக்கு ஒரு சில மணி நேரத்தை கட்டணம் செலுத்திப் பெற்றும் மக்களோடு பேசலாம்.

இந்தியாவை நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முகலாயர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்யவோ மதமாற்றங்களை முன்னெடுக்கவோ முயலவில்லை, மேலும் முஸ்லிம்கள் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கும், விருத்திக்கும் துணை நின்றவர்கள் என்ற வரலாற்றையும் மீள லாவகமான மொழி நடையில் நினைவூட்டலாம்.

இதன் தொடர்சியாக இதனையும் வாசியுங்கள்: “அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்