“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

🕔 May 17, 2020

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) –

கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை பற்றிய விடயம், வைரஸ் தாக்கம் நாட்டில் பற்றி எரிகிற விபரீதத்தை விடவும் அதிகமாக முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மரணித்த முஸ்லிம் உடலங்களை அடக்கம் மட்டுமே செய்ய வேண்டும் என்ற இஸ்லாமியக் கடமையை மீறி அவை எரிக்கப்படுவது முஸ்லிம்களின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தி ஆறாத வடுவாக உருவாகி வருகிறது.

இவ்விடயம் – பல அரசியல் கட்சிகளால் அவற்றின் அரசியல் லாபத்துக்காக பாவிக்கப்படுவதையும் அவதானிக்க முடிகிறது. தத்தமது மதம் சார்ந்த மக்களின் ஆதரவை அணிதிரட்டுவதற்கான வழியாகவும் கூட இவ்விவகாரம் பிரசாரப்படுத்தப்படுகிறது.

மேலும், ஏற்கனவே நமது நாட்டில் புரையோடிப்போய் இருக்கிற பயங்கரவாத அச்சத்துக்கு மேலதிகமாக தற்போது கொவிட்- 19 அச்சம் மக்களிடம் குடிகொண்டிருக்கிறது. சில கட்சிகள் இவ்வச்சங்களை தேர்தல் அரசியலில் வெற்றிக்கான அச்சாணியாக பொருத்தும் முயற்சியில் இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் கண்டுபிடிக்க முடியும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், செல்வத்தை சேர்த்துக்கொள்வதற்கும் மதங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சி ஆசிய வட்டகையில் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது.

கொரோனாவினால் இறந்தவர்களை எரிக்கலாம் அல்லது உரிய பாதுகாப்பு கவசமிட்டு புதைக்கலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. இறந்த உடல் புதைக்கப்பட்ட பின்பும் அவ்வுடலில் இருந்து நோய் மற்றவர்களுக்கு தொற்றும் என்று வைத்தியர்களோ நுண்கிருமி தொடர்பான விஞ்ஞானிகளோ ஆதாரபூர்வமாக இன்னும் சொல்லவில்லை. மற்றும் உலகில் அபாரமான முறையில் விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த நாடுகளில் கொவிட்-19 வைரஸ் தாக்கி உயிரிழந்தவர்களின் அநேக உடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதையும் செய்திகளில் பார்க்கிறோம். இவ்வடக்கங்களால் நோய் தொற்று ஏற்றட்டது என்று எங்கும் இதுவரை பதிவாகவில்லை.

இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெறும் சுற்றறிக்கைகளே வெளியிடப்பட்டுள்ளன. வெளியிடப்பட்ட இரண்டு சுற்றறிக்கைகளில் முதலாவதில் அடக்கம் செய்வதற்கும் அனுமதி இருந்தது. இரண்டாவதில்தான் எரிப்பது என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதியான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களோடு புதைப்பது ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டிருந்தால் மரணித்தவரின் மதம் சார்ந்த அடிப்படையில் இறுதிக் கிரியைகளை செய்வதை கவனத்தில் எடுக்காமல், உயிர் வாழும் மக்களின் ஆபத்தற்ற வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வழங்கி செயற்படலாம்.

ஹராமும் ஹலாலும்

இஸ்லாத்திலும் சூழலுக்கு ஏற்ப தகுந்த உடனடி தீர்மானம் மேற்கொள்வதற்கு அனுமதி உண்டு. பன்றி இறைச்சியை ‘ஹறாம்’ ஆக்கியுள்ள இஸ்லாம் – உணவு கிடைக்காத இடத்தில் உயிரைக் காப்பதற்காக ‘செத்த பன்றி’ இறைச்சியை உண்ணுவதற்கு அனுமதியை வழங்கியுள்ளது. உணவாக உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட மிருகங்களையே ‘தக்பீர்’ செய்து ‘ஹலாலாக’த்தான் சாப்பிடலாம் என்ற விதியை வைத்துள்ள மார்க்கம், உயிர் பாதுக்காப்புக்கு கொடுத்துள்ள முக்கியத்துவத்தை செத்த பன்றி இறைச்சி விடயத்தில் காணலாம். உலகாயத அக்கறைகளுக்கான ஆன்மீகப் பரிகாரமுறைகள் எல்லா மதங்களிலும் நிறையவே இருக்கின்றன.

உலக அளவில் முஸ்லிம்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்தவர்கள். பல பாரிய யுத்தங்களினாலும் உட்பிரிவினைச் சண்டைகளாலும் மில்லியன் கணக்கில் உயிரிழப்பை சந்தித்தவர்கள். கொத்துக்கொத்தாக மரணம் நிகழும் போதெல்லாம் அவர்களது உடலங்கள் எவ்வாறு அடக்கப்பட்டன என்று அக்காலத்தில் எவரும் கேள்வி எழுப்பவில்லை. கெங்கிஸ்தானின் மொங்கோலிய யுத்தம், சிலுவை யுத்தம் போன்றன நடைபெற்ற காலங்களில் மரணமடைந்த முஸ்லிம்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது என்று அன்றைய முஸ்லிம்கள் கேள்வி எழுப்பி இருக்கவில்லை.

எனவே, கொரோனாவால் மரணமடைந்தவர்களை அடக்கம் செய்ய முடியாது, எரித்தே ஆகவேண்டும் என்பதற்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானபூர்வமான நியாயங்களைக் காட்டுமாறு இலங்கை முஸ்லிம்கள் தயவுடன் கேட்டு நிற்பது நியாயமானதே. அடக்கம் செய்வதால் ஆபத்து என்ற செய்தியை மக்களுக்குள் வேண்டுமென்றே பரவவிட்டு செய்யப்படும் அரசியல் பிரசாரத்தால் மக்கள் அடைந்திருக்கிற பயத்தை நீக்கும் பொறுப்பு அரசையும் துறைசார்ந்த வல்லுனர்களையும் சார்ந்ததாகும்.

அரசியல் வேட்கைகளை அடைந்துகொள்வதற்காக சந்தர்ப்பங்களை பாவித்துக்கொள்ளுகிற, ஊடகங்களில் வாய்ச்சவடால் விடுகிற முஸ்லிம் நபர்கள் மிகச் சொற்பமானவர்களே நம் நாட்டில் உள்ளனர். சாதாரணமான எளிய முஸ்லிம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர், தங்களை இலங்கைக் குடிமக்கள் என்று அடையாளப்படுத்துவதில் பெருமைகொள்கிறார்கள்.

ஏமாற்று நாடகப் பட்டறை

ஆனால் இவர்கள் அடையாள அரசியல் மற்றும் அடையாள ஆன்மீகம் என்ற பொய்மைகளால் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்கிறேன். இந்த ஏமாற்று நாடகப் பட்டறையையும், போதனைக் கடைகளையும் கவனத்தில் எடுத்து அப்பாவி முஸ்லிம் மக்களோடு குரோத உணர்வை வளர்க்கவேண்டாம் என்று – முஸ்லிம் அல்லாத அனைத்து பெரும்பான்மை மக்களிடமும் வினயமான வேண்டுகோள் விடுக்கின்ற அதேவேளை; அனைத்து இனங்களிலும், மதங்களிலும் இவ்வாறான நபர்களும் நிறுவனங்களும் இக்காலத்தில் உள்ளனர் என்பதையும் கூற விரும்புகிறேன்.

இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள், புதிய நவ பொருளாதார முறைமைகளின் தாக்கத்தினால் தமது மதங்களின் பெருமரபு என்று நம்புகிற பகுதியின் உள்ளடக்கங்களை 1980 களில் இருந்து மறுசடங்காக்கம் மற்றும் மறுவசீகரமாக்கம் செய்யத் தொடங்கினர். இதன் விளைவுகளில் ஒன்றாக நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் பரஸ்பர சந்தேகமும், அச்சமும் தோன்றியிருக்கிறது.

மேலும்; அரசியல் ‘தரிசனக் கலாசாரம்’ ஒன்றும் – செயற்கையாக எழுச்சிபெற்று வந்துவிட்டது. அரசியல் கட்சிகள் சார்ந்த ஆன்மீகக் காட்சிகள் – அரசியல் செய்வதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமான புதிய உத்தி ஒன்றின் வடிவமாக வளர்ந்துவிட்டது.

எல்லா வண்ணக் கட்சிகளும் ஆன்மீகத்தை மக்களிடையே காட்சிப்படுத்தி அரசியல் செய்வது சிறந்த பயனுடையதாக அமைகிறது என்பதை அனுபவத்தில் கண்டுள்ளன. ஆகவே; கட்சிகளின் தலைவர்கள் பலரும் உறுப்பினர்களில் அநேகரும் இவ்விடயத்தில் தமது சூழ்ச்சி மேதமையை காட்டப் புறப்பட்டு விட்டார்கள்.

கொரோனாவின் ஆபத்தில் இருந்து இலங்கை மீட்சி பெற்ற பின்னர் நமது நாட்டை முன்நோக்கி நகர்த்த விரும்பினால் நமது முன்னோர்கள் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து கடைப்பிடித்த ‘நாம் இலங்கையர்’ என்ற ஐக்கியத்தைக் குறிவைத்து இன்றைய பரம்பரை பின்நோக்கித் திரும்பவேண்டும்.

எந்த நீதிமன்றங்களையும் விட ‘மக்கள் நீதிமன்றமே’ உன்னதமானது. பெரும்பான்மை சிங்கள மக்கள் நீதிமன்றத்துக்கு முஸ்லிம்களின் உடலங்களை எரிப்பது தொடர்பான வழக்கை கொண்டு செல்வதற்காகவே இம்மடலை வரைந்துள்ளேன்.

சமநிலையான ஊடகங்களை இவ்வழக்குகளுக்காக கட்டணம் வசூலிக்காது முன்நிலையாகும் வழக்குரைஞர்களாக நம்பி எனது மடலை இவ்வூடகங்களுக்கு அனுப்புகிறேன்.

அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள் போன்றோரிடம் கோரிக்கைகளை விடுப்பதைவிடவும் மக்கள் நீதிமையத்திடம் கேட்பது பயன் தரக்கூடும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன்.

உடல்கள் எரிக்கப்படுவதால் கவலை கொள்வோர் அனைவரும் மத பேதமின்றி சிங்கள பௌத்த மக்கள் மன்றத்திடம் வழக்குரைக்குமாறு ஆலோசனை கூறுகிறேன்.

உமர்லெப்பை பணிக்கரின் உறவினராக…

1925 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்கு முன்னரே தலதா மாளிகைக்கு இலவசமாக ராஜா யானையை பரிசளித்த ஏறாவூரின் மகனாகவும் யானையை வழங்கிய உமர்லெப்பை பணிக்கரின் உறவினர்களில் ஒருவனாகவும் பெருமதிப்புள்ள சிங்கள மக்களிடம் முஸ்லிம் உடலங்களை எரிப்பதை இனிமேலாவது நிறுத்தி ஆபத்தில்லாத அடக்கத்துக்கு வழி சமைக்க ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன். இதனைச் செய்வதற்கு – தீர்மானிக்கும் சக்தியாக உள்ள அரசியல் மற்றும் சுகாதாரத் துறை பிரமுகர்களுக்கு நீங்கள் அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.

இலங்கை முஸ்லிம் ஒருவரால் வழங்கப்பட்ட இந்த யானை, கண்டி எசல பெரெஹராவில் அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் சேவையாற்றியுள்ளது. இந்த யானையின் சர்வதேப் புகழ் இலங்கைக்கு பல லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த வாய் பேசா பிராணி தலதா மாளிகையில் சேவையாற்றிய அவ்வளவு காலத்திலும், பல பில்லியன் டொலர் அந்நியச் செலவாணியை எமது தாய் நாட்டுக்கு உழைத்து தந்துள்ளது. தேசிய சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ராஜாவும் உமர்லெப்பை பணிக்கரும் நமது நாட்டின் ஆயிரம் ரூபாய் பண தாளை அலங்கரித்துள்ளனர். இந்த பண தாளை தொடாதவர் யாரும் நமது நாட்டில் இருக்க மாட்டார்கள். ஆகவே; இந்த எரியும் பிரச்சினையை அணைத்து தருமாறு சகோதர பௌத்த மக்களிடம் ராஜா மற்றும் உமர்லெவ்வை சார்பாகவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பெரும்பான்மை விருப்பமும், ஆதரவும்

மஹிந்த ராஜபக்ஷ அவர்களது மந்திரிசபையில் நான் அங்கத்தவனாக இருந்த வேளை, 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் – நான் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் இறுதி நேரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்தது.

அப்போது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யும் முடிவையும் இக்கட்சி எடுத்தது. கட்சியின் முடிவுகளில் ஒன்றுக்கு கட்டுப்பட்டு அமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தேன். புகழையும் இகழையும் ஒருசேரப் பெற்ற எனது ராஜினாக் கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு பிரார்த்தனையையும், முன்கூட்டிய வாழ்த்தையும் அவருக்கு தெரிவித்திருந்தேன். இக்கடிதத்தை மஹிந்த அவர்கள் பல தேர்தல் மேடைகளில் தூக்கிக் காட்டிப் பேசியதை நினைவூட்டுகிறேன்.

அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்வதற்கு ஒத்துக்கொண்டேன். ஆனால் அத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக வேலை செய்வதற்கு மறுத்து ஒதுங்கி இருந்தேன். இறுதி நேரம் வரை மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அமைச்சுப் பதவியில் இருந்துவிட்டு திடீரென்று அவருக்கு எதிராக தேர்தல் வேலைகள் செய்வதற்கு எனது மனச்சாட்சி இடம் தரவில்லை என்று கட்சித் தலைமைக்கு கூறினேன். இந்தப் பிரச்சினை முற்றி இறுதியில் நான் முஸ்லிம் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டேன்

குறிப்பிட்ட தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சராகவும், அவர் தலைமை வகித்த கட்சியின் செயலாளராகவும் இருந்தவர் – எதிர்க்கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட களம் இறங்கியிருந்தார். மஹிந்தவின் கட்சியைச் சேர்ந்தவரே அவருக்கு எதிராக தேர்தலில் இறங்கியுள்ளார், வேறு கட்சியைச் சேர்ந்த நீங்கள் ஏன் எதிராக வேலை செய்ய முடியாது என்று எனது கட்சியைச் சேர்ந்த முன்னணி உறுப்பினர்கள் சிலர் என்னிடம் காரசாரமாக கேள்வி எழுப்பினர்.

மைத்திரியும் நானும் 1989 ஆம் ஆண்டு ஒன்றாக நாடாளுமன்ற உறுப்பினரானோம். ஆயினும், மைத்திரியின் எதிர் நிலைப்பாட்டை காரணமாக காட்டி எனக்கு – ‘மலிவு அரசியல்’ செய்ய முடியாது என்று அவர்களுக்கு சொன்னேன். திடகாத்திரமாக அன்று நான் எடுத்த முடிவின் காரணமாக அரசியல் ரீதியில் நான் அதிகம் இழந்திருக்கிறேன்.

மைத்திரி ஆட்சிக் காலத்தில் அவருடன் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நண்பர்களும், மஹிந்த அவர்களுக்கு தேர்தலில் வேலை செய்துவிட்டு அவர் தோற்ற பின்னர் மைத்திரியுடன் இணைந்து கொண்ட நண்பர்களும் சொன்ன ஆலோசனைகளை நான் ஏற்கவில்லை. அரசியல் பதவிகளை அலங்கரிப்பதைக் காட்டிலும் அரசியலில் நாணயத்தைக் கடைப்பிடிப்பதையே முக்கியமாகக் கருதினேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இன்றைய ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அன்றைய ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்ஷ அவர்களை ஆதரித்தே தேர்தல் வேலைகள் செய்தேன். இதனைக் காரணம் காட்டி இன்றுவரை அவரிடம் சென்று நான் எதனையும் கேட்கவில்லை.

கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கே மிக அதிகமான சிங்கள மக்கள் ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். 2019 இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சுமார் எழுபது லட்சம் மக்கள் வாக்களித்து கௌரவ கோத்தபாய அவர்களை ஜனாதிபதி ஆக்கியுள்ளீர்கள். இவ்வாக்காளர்களில் மிகப்பெரும்பான்மையோர் சிங்கள மக்களாவர்.

எனவே; பெரும்பான்மையான சிங்கள மக்களின் விருப்பத்துக்கு இயைபாக அரசியல் முடிவுகளை மேற்கொண்ட நான் – கொரோனா தாக்கி மரணிக்கும் முஸ்லிம்களை எரிப்பதை விடுத்து புதைப்பதற்கான அனுமதியை பெற்றுத்தரும் தீர்ப்பை வழங்குமாறும், இந்த எனது விளக்கத்தை உங்களது பிரதிநிதிகள் ஊடாக அரசாங்கத்துக்கும் சுகாதாரத் துறைக்கும் எடுத்துக்கூறவேண்டும் என்றும் பெரும்பான்மை மக்கள் நீமிமன்றத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இதனை மேலும் விளங்கிக் கொள்வதற்காக, இதையும் வாசியுங்கள்: ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

Comments