அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் ஹெரோயின் வியாபாரம்: தடுத்து நிறுத்தக் கோரி, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு மாதர் சங்கம் கடிதம்

🕔 April 25, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் தூள் (ஹெரோயின்) போதைப்பொருள் விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அங்குள்ள பொதுமக்கள் பல்வேறுபட்ட இன்னல்கள் மற்றும் அசௌகரியங்களுக்கு ஆளாகி வருவதாகவும், அந்தப் பகுதியிலுள்ள மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்கின்றவர்கள் மீது, போதைப்பொருள் வியாபாரிகள் – தாக்குதலை மேற்கொள்வதாகவும், முறைப்பாட்டாளர்களுக்கு எதிராக, போதைப்பொருள் வியாபாரிகள் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடுகளைச் செய்வதாகவும், மேற்படி மாதர் சங்கத்தின் முறைப்பாட்டு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘குறித்த போதைப்பொருள் வியாபாரத்தை சுற்றி வளைப்பதற்காக பொலிஸார் வரும் போது, அது குறித்து போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பொலிஸாரில் சிலர் – தகவல் வழங்குவதாக அறிய முடிகிறது’ என்றும், அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு மேற்பட்டோரின் கையெழுத்துக்களுடன் இந்தக் கடிதம், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் வியாபாரிகளிடம் தூள் (ஹேரோயின்) பெற்றுக் கொள்வதற்காக – பல ஊர்களிலிருந்தும் ஆட்கள் வருவதாகவும், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், குறித்த பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர், பள்ளிவாசல் தலைவர் போன்றோரிடம் தாம் முறையிட்டும் உரிய பலன் கிடைக்காமையினாலேயே, பொலிஸாருக்கு இது தொடர்வில் எழுத்து மூலம் அறிவிப்பதாகவும், மேற்படி மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதை உறுதிப்படுத்தி, அந்தப் பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் அங்குள்ள ‘மஸ்ஜிதுன் நிழாம்’ பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்டோரும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கடிதங்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாதர் சங்கத்தினர் அனுப்பி வைத்துள்ள முறைப்பாட்டுக் கடிதத்துடன் கிராம சேவகர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பள்ளிவாசல் தலைவர் ஆகியோரின் கடிதங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்