சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார்

🕔 April 23, 2020

– பாறுக் ஷிஹான் –

ம்மாந்துறையில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேக நபருக்கு, துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கினார் எனும் சந்தேகத்தில் நபரொருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர், மறுநாள் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சந்தேக நபரை தடுத்துவைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மேலதிக தகவலை பெற்ற பின்னர் இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை மலையடிக்கிராமத்தைச் சேர்ந்த 38 வயதினையுடைய நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு இரண்டாவதாக  கைதான  சந்தேக நபர் ஏலவே கைதான சந்தேக நபருக்கு   துப்பாக்கி சுடுவது  குறித்து  பயிற்சி அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று கைதான இரண்டாவது  சந்தேக நபரது இடது கையில் 04 விரல் நீக்கப்பட்டுள்ளது.

ஏலவே  மீட்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக மறைத்து வைத்தமை, அதனை பயன்படுத்த உதவி செய்தமை, துப்பாக்கி சூட்டு பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய இச்சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இது தவிர பயங்கரவாத குழுக்களுக்கும் கைதான சந்தேக நபர்களுக்கும் ஏதாவது தொடர்புகள் உள்ளதா என பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட துப்பாக்கி பாகிஸ்தான் நாட்டு தயாரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டவது சந்தேக நபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் நாளை வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை  நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார் .

தொடர்பான செய்தி: சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்