சம்பளம் வேண்டாம், நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள்: முன்னாள் அமைச்சர் மனோ வேண்டுகோள்

🕔 April 5, 2020

நாடாளுமன்றத்தை உடனடியாக ஜனாதிபதி கூட்ட வேண்டும் என்றும், அவ்வாறு தருணத்தில் உறுப்பினர்களுக்கு சம்பளம் மற்றும் வரப்பிரசாதங்கள் தேவையில்லை எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் அருகருகாக அமர்ந்து சபை அமர்வை நடத்த வேண்டியதில்லை என்றும், தொலைதொடர்பு தொழில்நுட்ப காணொளி மாநாட்டின் மூலமாக நாடாளுமன்ற அமர்வை நடத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது;

உலகின் வேறுபல நாடுகளில் இத்தகைய காணொளி அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இலங்கையில் இன்று வீடுகளில் முடங்கி இருக்கும் அனைத்து மக்களும் இந்த அமர்வை பார்த்து கேட்க போவதால், இன்றைய தேசிய நெருக்கடி தொடர்பில் நாட்டில் பொதுஜன அபிப்பிராயம் உருவாகும்.

நாட்டில் நாளுக்கு நாள், பரிசோதிக்க பரிசோதிக்க, புதிது புதிதாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக இவ்வாறு நாடாளுமன்றத் கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலம், ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் நிவாரணங்கள், பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் கிடைக்காததால், நெருக்கடியாகியுள்ள திக்கற்ற மக்களின் வாழ்வாதாரம் பற்றி ஆராய்வதற்காகவும்; நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால், கொரோனாவுக்கு அப்பால் ஏனைய நோய்களாலும் மக்கள் உயிரிழக்க கூடிய அபாயம் பற்றி ஆராய்வற்காகவும்; ஜூன் 02க்கு முன் தேர்தலை நடத்த முடியாததால் ஏற்படுகிற அரசியலமைப்பு நெருக்கடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை பெறுங்கள் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் கூறி விட்டதை ஆராய்வதற்காகவும் நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்