கொரோனா வைரஸும், ‘வாய்க்கும் மூளைக்கும்’ தொடர்பில்லாத ஜும்ஆ பிரசங்கங்களும்: தேவை அவதானம்

🕔 February 1, 2020

– அஹமட் (புதிது செய்தியாளர்) –

க்களை நல்வழிப்படுத்துவதற்காகவும் அறிவூட்டும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஜும்ஆ பிரசங்கள் அந்த இலங்குகளை சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்றுகின்றனவா என்கிற கேள்விகள் மக்கள் மத்தியில் அடிக்கடி எழுகின்றன.

ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துவோர் – தாம் நினைப்பது போலவும், தமது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு இணங்கவும் தகவல்களைக் கூறி, மக்களை வழிநடத்த முயற்சிப்பது மோசமானதும் பாவமானதுமான காரியமாகும்.

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கமும் அச்சமும் ஏற்பட்டுள்ள சூழ் நிலையில், அது குறித்து மக்கள் மத்தியில் பாரிய சந்தேகங்கள் உள்ளன.

கொரோனா வைரஸ் எப்படி, எதனால் ஏற்படுகிறது? அதனை எவ்வாறு சுகப்படுத்தலாம் என்கிற பல கேள்விகளுக்கு – பதில் தெரியாமல் உலகிலுள்ள விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் ‘தலையைப் பிய்த்து’க் கொண்டிருக்கும் நிலையில், ஜும்ஆ பிரசங்கம் மேற்கொள்ளும் சிலர் – தவறானதும் புத்திசாலித்தனமற்றதுமான விளக்கங்களை மக்களுக்குக் கூறி, பிழையாக வழிநடத்த முயற்சிப்பதைக் காண முடிகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனையிலுள்ள ஒரு பள்ளிவாசலில் ஜும்ஆ பிரசாங்கம் மேற்கொண்ட ஒருவர், கொரோனா வைரஸ் தொடர்பில் தெரிவித்த சில கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவையாகும்.

அவை;

  • பாம்பு உண்பதால்தான் சீனர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
  • முகத்தை மூடும்படி இஸ்லாத்தில் கூறப்பட்ட கட்டளைக்கு மாறு செய்தமையினால்தான், கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி, அனைவரையும் முகக் கவசம் கொண்டு, தங்கள் முகத்தை மூடும் நிலையை அழ்ழாஹ் இப்போது ஏற்படுத்தியுள்ளான்.

என்பவை, குறித்த மௌலவி – தனது ஜும்ஆ பிரசங்கத்தில் கூறிய வியடங்களாகும்.

கொரோனா வைரஸ் எதனால் ஏற்பட்டது என்பதற்கு இதுவரை விஞ்ஞானிகள் கூட – விடை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால், சமூக ஊடகங்களில் நினைப்பதெயெல்லாம் எழுதி, கண்டதையெல்லாம் நம்புகின்ற கூட்டத்தார், கொரோனா வைரஸ் தொடர்பில் தமது புத்திக்கு எட்டியவற்றினையெல்லாம் எழுதி வருகின்றனர்.

அதில் ஒன்றுதான் பாம்பு உண்பதால் சீனர்களுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது என்கிற கட்டுக்கதையாகும்.

இந்தக் கட்டுக்கதையை பார்த்து – நம்பிய மௌலவிதான், அதனை தனது ஜும்ஆ பிரசங்கத்தில் நேற்று கூறியிருக்க வேண்டும்.

அடுத்தது, இஸ்லாத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டுமா இல்லையா என்கிற வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில், இலங்கையில் முகத்தை மறைத்து ஆடை அணிவதற்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் இருந்து கொண்டு, ஒரு நோயினால் ஏற்பட்ட விளைவுடன், தனது நம்பிக்கைக்கு முடிச்சிட்டு, அதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஜும்ஆ பிரசார மேடையில் ஒருவர் கூறுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தலில்; கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக, ஆரோக்கியமான எவரும் முகம் மூடிகளை அணிய வேண்டியதில்லை எனத் தெரிவித்துள்ளதை இங்கு குறிப்பிடுதல் அவசியமாகும்.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதற்குரிய அறிகுறிகளான இருமல், மூச்செடுப்பதில் சிரமம் உள்ளவர்கள் மட்டும் – முகம் மூடிகளை அணிந்தால் போதுமானதாகும்.

அதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் அடிக்கடி தொடர்புபடக் கூடிய சுகாதார பணியாளர்களும் – முகம் மூடிகளை அணிய வேண்டும் என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே மிகப் பெறுமதியான ஜும்ஆ பிரசார மேடைகளை அறிவற்ற வகையில் பயன்படுத்தி, மக்களை பிழையாக வழிநடத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளல் வேண்டும்.

கொரோனா பற்றி ஜும்ஆ பிரசங்கம் மேற்கொள்ளும் ஒருவர் அதற்கான முழுமையான தயார்படுத்தல்களைச் செய்து கொண்டு, ‘மிம்பர்’ மேடைக்கு வரவேண்டும்.

அதை விட்டு விட்டு – வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று, கண்டவை கேட்டவை அனைத்தையும் நம்பிக்கொண்டு, அவற்றை ஜும்ஆ பிரசங்கத்தில் கொட்டுவதால், ஒட்டுமொத்த முஸ்லிம்களையே மற்றைய சமூகம் கேவலமாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டு விடும்.

அதேவேளை, ஜும்ஆ பிரசாரம் மேற்கொள்கின்றவர்களை அதற்கு முந்தைய நாட்களில் அந்தப் பிரதேசத்துக்குரிய பெரிய பள்ளிவாசல் நிருவாகம் அழைத்து, அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதை கேட்டறிந்து கொள்வதோடு, அவர்களை நெறிப்படுத்துவதும் அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்