சீனாவிலிருந்து இன்று நாடு திரும்பிய 33 மாணவர்கள், தியத்தலாவ தங்குமிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்

🕔 February 1, 2020

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்த விசேட விமானம், இன்று சனிக்கிழமை காலை நாட்டை வந்தடைந்தது.

மேற்படி யு.எல் 1423 ரக விமானம், காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அந்த விமானத்தில் வந்த மாணவர்கள், தியத்தலாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரத்தியேக தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அங்கு, இவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றனரா என, பரிசோதிக்கப்படுவர்.

இந்த நிலையில் கடந்த 05 நாட்களுக்குள் சீனாவிலிருந்து 627 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, சீனாவிலிருந்து இன்று நாடுதிரும்பிய 33 மாணவர்களுடன் அந்த எண்ணிக்கை 660ஆக அதிகரிக்கிறது.

இந்த நிலையில், சீனாவிலுள்ள மேலும் 204 இலங்கையர்களை, நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரக காரியாலயம் தெரிவித்துள்ளது

Comments