பொதுத் தேர்தலும் அம்பாறை மாவட்டமும்: மு.கா. தலைவரின் ‘கத்தி’க்குப் பலியாகப் போகும் நாலில் ஒருவர் யார்?

🕔 January 16, 2020

– மப்றூக் –

நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

முதலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியாகவா? அல்லது தனித்தா? போட்டியிடும் என்கிற கேள்விகள் உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவொன்று 10 வேட்பாளர்களைக் களமிறக்க வேண்டும்.

அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து – தனது மரச் சின்னத்தில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதென தீர்மானித்தால், அந்தக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்பும் பிரதான ஊர்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஓரளவாயினும் சந்தர்ப்பங்களை கட்சித் தலைவரால் வழங்க முடியும்.

சிலவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு ஒரு தரப்புடனோ கூட்டணியமைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலை ஏற்பட்டால், அநேகமாக மூன்று பேரை மட்டுமே முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறக்கும். அப்படி களமிறக்கியமையினால்தான் மு.காங்கிரஸுக்கு கடந்த காலங்களில் அதிக உறுப்பினர்களை வெல்ல முடிந்தது.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 04 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கல்முனையைச் சேர்ந்த எச்.எம்.எம். ஹரீஸ், சம்மாந்துறை எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த பைசல் காசிம் ஆகிய மூவரும் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்கள். அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் – தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியமைத்து அந்தக் கட்சி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் மூன்று பேரை மட்டுமே வேட்பாளராகக் களமிறக்கும் ஒரு நிலைவரம் ஏற்பட்டால், அந்த மூன்று வேட்பாளர்களும் யாராக இருப்பார்கள் என்கிற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது.

தற்போது தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிக்கும் ஹரீஸ், மன்சூர் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை கட்சித் தலைவரிடம் கேட்பார்கள்.

அதேவேளை, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக உள்ளார் என அறிய முடிகிறது.

அப்படியென்றால், மேற்படி நால்வரில் ஒருவருக்கு ‘வெட்ட’ வேண்டிய தேவை மு.கா. தலைவருக்கு ஏற்படும். மு.கா. தலைவரின் ‘கத்திக்கு’ பலியாகப் போகும் அந்த ஒருவர் யார் என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

“நிந்தவூரைச் சேர்ந்த பைசல் காசிமுக்கு சந்தர்ப்பம் வழங்கத் தேவையில்லை” என்றும்; “அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீருக்கே எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என்றும், இப்போதே கோஷம் எழுப்பத் தொடங்கி விட்டார்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் ஆதரவாளர்கள்.

“நிந்தவூரில் மொத்தமாக உள்ள வாக்குகளில் பைசல் காசிமுக்கு 7000 வாக்குகள்தான் உள்ளன. இப்போது நிந்தவூரில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் ஹசன் அலிக்கும் ஆதரவு பெருகியுள்ளதால், பைசல் காசிமுக்கு ஆதரவான வாக்குகள் இன்னும் குறைவடையும். ஆனால், அட்டாளைச்சேனையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு பெருமளவு வாக்குகள் உள்ளன. எனவே, நஸீரைத்தான் வேட்பாளராகக் களமிறக்க வேண்டும்” என்று, தமது கோரிக்கைக்கான நியாயத்தையும் நஸீர் தரப்பு முன்வைக்கின்றது.

ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் பைசல் காசிமை ‘வெட்டி’ விட்டு, நஸீருக்கு வேட்பாளர் ஆசனத்தை மு.கா. தலைவர் ஹக்கீம் வழங்குவாரா என்கிற கேள்வியும் உள்ளது.

நஸீர் தரப்பு எதிர்பாராத விதமான பைசல் காசிமுக்கும், ஹரீஸ் மற்றும் மன்சூருக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஹக்கீம் வழங்கினால், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீரின் கதி என்னவாகும்? அவர் எவ்வாறான அரசியல் முடிவுகளை எடுக்கக் கூடும் என்கிற ஆரூடங்களும் இப்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளன.

மு.கா. தலைவர் ஹக்கீமிடத்தில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு சில மாதங்களுக்கு முன்னர் இருந்த ‘இடம்’ இப்போது இல்லை என்கிற பேச்சுக்களும் கட்சிக்குள் உள்ளது.

தேசிய காங்கிரஸின் முன்னாள் அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை, முஸ்லிம் காங்கிரஸில் சில மாதங்களுக்கு முன்னர் இணைந்து கொண்டதால், நஸீரை விடவும் உதுமாலெப்பைக்கே ஹக்கீம் அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும், கட்சித் தலைவரால் எதிர்காலத்தில் நஸீர் ஓரங்கட்டப்படலாம் என்றும் கட்சிக்குள் பேசப்படுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று, கட்சித் தலைவரிடம் பேரம் பேசும் நிலையில் நஸீர் இல்லை என்றும் கட்சிக்குள் இருக்கும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

ஆக, பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் நஸீருக்கு கிடைக்காமல் போனால், அடுத்து அவர் எடுக்கும் அவசர அரசியல் முடிவு என்னவாக இருக்கும்?

  • அவர் வேறொரு கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம்.
  • அல்லது கட்சித் தலைமையின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கட்சியில் தொடர்ந்தும் இருக்கலாம்.
  • சிலவேளை, அரசியலை விட்டும் ஒதுங்கலாம்.

இவற்றில் எந்த முடிவை நஸீர் எடுப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

சிலவேளை, வேறொரு கட்சியில் இணைந்து தேர்தலில் நஸீர் போட்டியிடுவதற்கான முடிவை எடுத்தால், அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது பற்றிய பேச்சுக்களும் இப்போதே பரவத் தொடங்கியுள்ளன.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் நஸீர் இணையக் கூடும் என்கின்ற பேச்சுக்கள் பரவலாக உள்ளன.

அதிசயங்களும் அற்புதங்களும் – அரசியலில்தான் அதிகமாகவும் அடிக்கடியும் நிகழ்கின்றன என்பதால், ஒரு ‘குதிரை வீரனாக’ அடுத்த பொதுத் தேர்தலில் நஸீர் வலம் வரலாம் என்கிற சாத்தியங்களையும் புறக்கணித்து விட முடியாது.

குறிப்பு: தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்