புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

🕔 November 16, 2019

ன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சிலரே இந்த பஸ்ஸில் பயணித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

செட்டிக்குளத்திலுள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு அழைத்து சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

“முதலில் கல்வீச்சு தாக்குதல் நடத்திய பிறகு துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியால் வாக்காளர்களை ஏற்றிச்சென்ற குறைந்தது இரண்டு பஸ்கள் சேதமடைந்ததன” என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பஸ்கள் சென்றுகொண்டிருந்த வீதியில் டயர்களை எரித்து தாக்குதலாளிகள் இடையூறு ஏற்படுத்தியதாகவும், பின்பு சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சாலையை சரிசெய்து, வாக்காளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸுக்கு வாக்குச்சாவடி வரை பாதுகாப்பு அளித்ததாகவும் ஏஎஃப்பி குறிப்பிட்டுள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்