ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்
🕔 November 16, 2019
– முன்ஸிப் அஹமட் –
எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை வேளையில் சிறிதளவு மழை செய்த போதும், மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றமையைக் காண முடிகிறது.
சில வாக்களிப்பு நிலையங்களில் பணியாற்றிய பிரதான வேட்பாளர் ஒருவர் சார்பான வாக்களிப்பு நிலைய முகவர்கள், எதிர் தரப்பினரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் வெளியேறியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த முறைப்பாடுகளில் உண்மைத்தன்மை இல்லை என, அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேர்தல் முறைப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, வாக்காளர் அட்டை இல்லை எனும் காரணத்தினால், அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வாக்களிப்பதற்கு வாக்காளர் அட்டை அவசியமில்லை என்றும், வாக்காளர் அட்டை இல்லாதவர்களும் வாக்களிக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், சில வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களின் அடையாள அட்டைகளைப் பரிசோதித்த பின்னரே, அவர்களை பொலிஸார் உள்ளே அனுமதிப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.