“ஊழல்வாதிகளுக்கு எனது அமைச்சரவையில் இடமில்லை”: எப்படிக் கண்டு பிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் சஜித்

🕔 November 7, 2019

– அஹமட்

னாதிபதி தேர்தலில் தான் தெரிவுசெய்யப்பட்டால் அமையவுள்ள அரசாங்கத்தில், ஊழல் – மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இது வரவேற்கத்தக்க விடயமாகும். மோசடிப் பேர்வழிகள் இல்லாத ஓர் அமைச்சரவை அமைவதென்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியமாகவே இருக்கும்.

ஆனாலும், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என்பதை எவ்வாறு சஜித் பிரேமதாஸ கண்டறியப் போகிறார்? என்று மூத்த முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் கேள்வியெழுப்பினார்.

காய்ச்சலின் போது உடல் வெப்பநிலையை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் ‘தெர்மா மீற்றர்’ போல், ஊழல் – மோசடி புரிந்தவர்களை அடையாளம் காண்பதற்கு, ஏதாவதொரு கருவியை சஜித் பயன்படுத்தப் போகிறாரா என்றும், அந்த மூத்த அரசியல்வாதி நகைச்சுவையாக கேட்டார்.

அரசியலில்வாதிகளில் மிகக் கணிசமானோர் ஊழல் மற்றும் மோசடிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களில் சிலர் அகப்பட்டுள்ளனர், சிலர் அகப்படவில்லை. சிலரின் பெயர் அம்பலமாகியுள்ளன. சிலரின் பெயர்கள் இன்னும் மறைவாகவே இருக்கின்றன.

நிலைமை இப்படியிருக்க ஊழல், மோசடிகளுடன் தொடர்புபட்டவர்களை சஜித் பிரேமதாஸ எவ்வாறு அடையாளம் காணப்போகின்றார்? அதற்காக அவர் வைத்துள்ள பொறிமுறை என்ன என்பது பற்றி அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், குறித்த முஸ்லிம் மூத்த அரசியல்வாதி கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுகின்றவர்களின் பெயர்ப்பட்டியலில், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை சஜித் வழங்குவாரா, மாட்டாரா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளதாகவும் அந்த மூத்த அரசியல்வாதி கூறினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றிபெற்றால் – அந்த அரசாங்கத்திலும் தானே பிரதமர் என்று, ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்