கல்முனை ஆதார வைத்தியசாலையிலுள்ள பள்ளிவாசல் புனரமைப்பு தடுக்கப்பட்டது எப்படி: விளக்குகிறார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்

🕔 August 26, 2019

‘கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு பெயின்ற் பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி’ எனும் தலைப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை ‘புதிது’ தளத்தில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தியானது பல்வேறு தரப்பினரிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. செய்தி தொடர்பில், பல தரப்பட்டவர்களும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் உடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

இதனையடுத்து கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு பெயின்ற் பூச விடாமலும், பள்ளிவாசலை புனரமைக்க விடாமலும் தடுக்கப்பட்டமை குறித்து, விரிவான விளக்கமொன்றினை ‘புதிது’ செய்தித்தளத்துக்கு ஜவாத் அனுப்பி வைத்துள்ளார்.

அது வருமாறு;

‘இப்பள்ளிவாசல் சுமார் 50 வருடம் பழைமையானது. இங்கு ஆண்கள் மேல் தளத்திலும், பெண்கள் கீழ் தளத்திலும் தொழும் வசதிகள் உண்டு. இதன் பராமரிப்பு கல்முனை நகர பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழே உள்ளது. நான் அதன் தலைவராக இருக்கின்றேன்.

கடந்த 2012ல், 45 வருடம் பழைமை வாய்ந்தஇப்பள்ளிவாசல் மேற்பரப்பில் கொங்கிறீட் பரப்பு வெடித்து, மழை காலங்களில் உள்ளே தொழும்போது இடுக்குகளினால் ஒழுகும். அதனால் “ஒழுகும் தண்ணீரில் உடுத்திருக்கும் உடைகள் கரைபடிகின்றன, அத்துடன் பழைமைப்பட்ட இக்கட்டிடத்தின் சீமெந்திப் பூச்சுக்கள் கொட்டுகின்றன” என்று அங்கு கடமை புரியும் எமது முஅத்தினும், தொழுகைக்காக வரும் டொக்டர்களும், உத்தியோகத்தர்களும் நோயாளிகளும் முறையிட்டனர்.

எனவே, இதுபற்றி அங்கு கடமையாற்றிய டொக்டர் அமீன் தலைமையில் 2013ல் கலந்தாலோசித்தோம். அதன்போது கட்டிடத்தை இடித்து அகற்றாமல் சீற்கூரை அமைத்து பூச்சுக்களை வழித்து மீளவும் பூசி தீந்தை பூசுவதென தீர்மானிக்கப்பட்டது.

பள்ளிவாசல் கட்டிட குறைகளை பூர்த்தி செய்வதற்கான செலவுகளை டொக்டர் அமீன் தலைமையிலான குழு பொறுப்பேற்றது.

அதற்கான அனுமதிகள் சுகாதார திணைக்களத்திடமும், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் முரளீஸ்வரனிடமும் பெறப்பட்டது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

வேலை செய்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபா முன்பணம் பேசி கொடுக்கப்பட்டு கூரைக்கான சாமான்கள் அனைத்தும் கொண்டு வந்து வேலைகள் ஆரம்பிக்க தொடங்கிய போது, வேலைகளை உடன் நிறுத்தும்படியும், அபிவிருத்திக் குழுவினை சந்திக்கும் படியும் வைத்திய அத்தியட்சகர் கூறினார்.

அவ் வேண்டுதலை ஏற்று நான் அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துகொண்டு விடையங்களை விளக்கி கூரைக்காக 09 அங்கும் அங்குலம் உயர்த்துவதற்கு அனுமதி கேட்டேன். ஒரு அங்குலம் உயர்த்துவதற்கும் அனுமதி தர முடியாது என அவர்கள் மறுத்ததோடு, அங்கு சமூகமளித்திருந்த தேரர்; “அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கோயில் கட்ட இடம் தர முடியுமா“? என வினவினார்.

“அதை அவர்களிடம் கேளுங்கள், நான் கல்முனை நகர பள்ளிவாசலில் இருந்து வந்திருக்கின்றேன்” எனக்கூறிவிட்டு ஏமாற்றத்துடன் வந்து, இறக்கிய சாமான்கள் அனைத்தையும் ஏற்றி எடுத்துக் கொண்டோம்.

இதில் சுமார் 50 ஆயிரம் ரூபா நஷ்டம் டொக்டர் அமீனுக்கு ஏற்பட்டது.

இந்தப் பின்னணியில், சுமார் 06 வருடங்கள் காத்திருந்து, கடந்த 05 மாதங்களுக்கு முன்னர் வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரனின் அனுமதியுடன் வெள்ளை நிறத்தை மட்டுமே பூசுவதற்கு பற்பல நிர்ப்பந்தங்களையும், நிபந்தனைகளையும் ஏற்றுகக் கொண்டு மை பூசி அழகு படுத்தினோம்.

இந்த இடத்தில் ஓர் உண்மையைக் கூற வேண்டும். வைத்திய அத்தியட்சகர் டொக்டர் முரளீஸ்வரன் நல்லதோர் வேற்றுமையற்ற மனிதர். அவர் ஒரு நிர்வாகி என்பதால், வரும் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்.

இன ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, இந்த விடயத்தில் நாங்கள் பொறுமையாக இருந்தோம்.

தொடர்பான செய்தி: கல்முனை ஆதார வைத்தியசாலை பள்ளிவாசலுக்கு ‘பெயின்ற்’ பூச விடுகிறார்கள் இல்லை; இணைந்த வட கிழக்கில் எப்படி சேர்ந்து வாழ்வது: ஜவாத் கேள்வி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்