சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த, அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை: ஐ.நா. அறிக்கையாளர்

🕔 August 26, 2019

நாட்டில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட போது, அரசாங்கம் அதனைக் கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் அஹ்மட் ஷஹீட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் நாட்டில் வாழ்கின்ற பிறமதங்களைப் பின்பற்றும் மக்களைப் பக்கச்சார்பின்றி அரசாங்கம் நடத்துவதுடன் அவர்களது உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவது அவசியமாகும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த ஷஹீட், இன்று தனது விஜயத்தை முடித்துக் கொண்டு கிளம்புவதற்கு முன்பாக, கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோதே, அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

மேலும், அரச தலைவர்களும், மதத்தலைவர்களும் வெறுப்புணர்வுப் பேச்சுகள் மற்றும் செயற்பாடுகள் என்பவற்றுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைப் பகிரங்கமாகத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட சமூகத்துடனான தமது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தனது இலங்கைக்கான விஜயத்தின் போது, இங்கு மதச் சுதந்திரம் என்ன நிலையில் உள்ளது என்பதை அவர் ஆராய்ந்திருந்தார். 

தலைநகர் கொழும்புக்கு மேலதிகமாக வடக்கு, வடமேல், கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொண்ட ஷஹீட், அங்கு மதம் சார்பான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மதத்தலைவர்கள், முறைப்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்தார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்