மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களை, பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, ரத்ன தேரர் உண்ணா விரதம்

🕔 May 31, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் – உண்ணா விரதப் போராட்டமொன்றினை இன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் முன்னெடுத்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோரை, அவர்களின் பதவிகளிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரி, இந்த போராட்டத்தை அவர் தொடங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்துவதாக இதன்போது குற்றம்சாட்டிய தேரர்; “மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி, தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றார்” எனவும் கூறினார்.

இதேவேளை, அரச நிறுனங்கள் பலவற்றில் அமைச்சர் றிசாட் பதியுதீன் – ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேரர் குற்றம் சாட்டினார்.

எனவே, இவர்கள் மூவரையும் அவர்களின் பதவிகளிலிருந்து அகற்ற வேண்டும் என்று, தேரர் இதன் போது வேண்டிக் கொண்டார்.

மேற்படி முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரையும் அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கும் வரை, தனது உண்ணா விரதம் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8.30 மணி தொடக்கம், தலதா மாளிகை முன்பாக, தனது உண்ணா விரதப் போராட்டத்தை தேரர் முன்னெடுத்து வருகின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரத்ன தேரர், சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments