அரச ஊழியர்களின் ஆடைகளுக்கு கட்டுப்பாடு; ஹபாயா அணிய முடியாது: வெளியானது சுற்றறிக்கை

🕔 May 31, 2019

– முன்ஸிப் அஹமட் –

ரச ஊழியர்கள் கடமை நேரத்தில் அணிய வேண்டிய ஆடைகள் தொடர்பான கட்டுப்பாட்டினை விதித்து, அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

பொது நிருவாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கை ஒன்றினூடாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, ஆண் உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் காற்சட்டை மற்றும் மேற் சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒசரி) அணிய வேண்டுமெனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீருடை அணிய பணிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள், தங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட சீருடையில் கடமைக்கு வரவேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கர்ப்ப காலத்தில் அரச சேவையிலுள்ள பெண் உத்தியோகத்தர்கள், தமக்கு வசதியான ஆடைகளை அணிந்து கடமைக்கு வருவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், சமய மரபுகளுக்கு இணங்க தமது உடைகளை அமைத்துக் கொள்வதற்கு யாரும் விரும்புவார்களாயின், அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட ஆடைகளை அணிந்து, அதன் பின்னர் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும், முழு முகத்தையும் தெளிவாக அடையாளம் காணக் கூடிய விதத்திலும் மேலதிக ஆடை அணிகலன்களைப் பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று, அரச நிறுவனங்களுக்குள் சேவைகளைப் பெறுவதற்காக வருவோரும், தம்மை தெளிவாக அடையாளம் காட்டக் கூடிய வகையில் ஆடைகளை அணிந்து வர வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் படி, முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயாவை, கடமை நேரத்தில் இனி அணிய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்