காட்டுமிராண்டிளும், அயோக்கியத்தனங்களும்: பாவத்தின் பங்குதாரிகளும்

🕔 April 23, 2019

– மப்றூக் –

தீயில் எரிந்த முகம், அதன்மீது ‘நெற்’ துணி; கண்களைத் திறக்க முடியாமல் மட்டகளப்பு போதனா வைத்தியசாலை ‘வார்ட்’டிலுள்ள கட்டிலில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு எப்படியும் 13 வயதுக்குள்தான் இருக்கும்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காயப்பட்டவர்களில் அந்த சிறுவனும் ஒருவன்.

தன்மீது அந்தத் தாக்குதல் ஏன் மேற்கொள்ளப்பட்டது என்று அவனுக்குத் தெரியாது.

தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் முஸ்லிம்கள் என்று பரவலாகக் கூறப்படுகிறது. சம்பவங்களுடன் தொடர்புபட்டார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைதாகிக் கொண்டிருப்பவர்களும் முஸ்லிம்களாகவே உள்ளனர்.

நடந்த தாக்குதல்கள் காட்டுமிராண்டித்தனமானவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. எதைக் கூறியும், இந்தத் தாக்குதல்களை நியாயப்படுத்தி விடவும் முடியாது.

அதேவேளை தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் முஸ்லிம்கள் என்று வருகின்ற தகவல்களை மறைக்கவோ, பூசி மெழுகவோ முயற்சிப்பது அயோக்கியத்தனமாகவே அமையும்.

இலங்கை முஸ்லிம்களுக்குள் எப்போது மார்க்கத்தின் அடைப்படையில் இயக்க வேறுபாடு தோன்ற ஆரம்பித்ததோ, அப்போதே அந்த சமூகத்துக்குள் ‘சனியன்’ புகுந்து விட்டது.

ஒவ்வொரு கொள்கையுடையோரும், தத்தமது அமைப்பினர் தொழுவதற்காக தமக்கென்று தனித்தனியான பள்ளிவாசல்களைத் தேவைப்படுத்தியும்,  அதற்காக ‘வெட்டுக் குத்துகளிலும்’ இறங்குவதற்கு – எப்போது முற்பட்டார்களோ, அப்போதே முஸ்லிம் சமூகம் தனது அமைதியை இழந்து விட்டது.

அரேபிய கலாசாரங்களையெல்லாம் இஸ்லாம் என நம்பிக் கொண்டிரும் ஆசாமிகள், ‘மிம்பர்’களில் ஏறி, முஸ்லிம் சமூகத்தை வழி நடத்த முற்படுகின்றதொரு அபத்தமான சூழ்நிலையில், முஸ்லிம் சமூகத்துக்குள் முளைத்துள்ள – விச வேர்களை எப்படி அறுத்தெறிவது என்பதுதான் இங்குள்ள பெரும் கேள்வியாகும்.

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்குள் மார்க்க விடயங்களை சொல்வதற்கும், அவற்றினை செயற்படுத்துவதற்கும் – வன்மங்களையும், வன்முறைகளையும் யாரெல்லாம் கையில் எடுத்தார்களோ, அவ்வாறான நபர்களையும் அமைப்புக்களையும் யாரெல்லாம் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்களோ, அவர்கள் எல்லோரும் நடந்து முடிந்த இந்தப் பாதங்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தனது இரண்டு பிள்ளைகளை சீயோன் தேவாலயத் தாக்குதலில் இழந்து விட்டு, தனது காயங்களுக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தாயொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பெண்ணின் வலிகளையும், கண்ணீரையும் என்ன சொல்லி நாம் துடைத்து விட முடியும்.

சீயோன் தேவாலயத்தில் தாக்குதல் நடந்த போது அங்கு கடமையிலிருந்த அருட் சகோதரர் ஸ்டான்லி, காயப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரின் மனைவி, மகன் ஆகியோரும் அந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

“இந்தத் தாக்குதலை வைத்து – முஸ்லிம் சமூகத்தின் மீது பழிபோட முடியாது. தாக்குதலை நடத்தியவனை நான் முஸ்லிமாக பார்க்கவில்லை; பயங்கரவாதியாகவே பார்க்கிறேன். எனக்கு ஏராளமான முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள்” என்கிறார், அந்தத் தாக்குதலில் காயப்பட்ட அருட் சகோதரர் ஸ்டான்லி.

ஒரு கணம் அவரின் முன் – கூனிக் குறுகி, வெட்கப்பட்டு நிற்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியவில்லை.

தானும் தன்பாடும் என இருக்கின்ற – சக மனிதனை இப்படி கொடூரமாகக் கொன்று குவிப்பதற்கு, ‘ஜிஹாத்’ என முத்திரை குத்தும், இவ்வாறான ‘தாயோழித்தனங்கள்’ மீது – காறி உமிழ்வதே நமது எதிர்ப்பின் தொடக்கமாக இருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்