அக்கரைப்பற்றில் குப்பைகளைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்க கொரிய நிறுவனம் பேச்சு

🕔 March 26, 2019
– பாறுக் ஷிஹான்

க்கரைப்பற்று  பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தூதுக்குழுவினர் இன்று செவ்வாய்கிழமை மாலை அக்கரைப்பற்று  மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லாவை சந்தித்து   இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

நல்லாட்சிக்கான புத்தாக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சந்திப்பில், அக்கரைப்பற்று  மாநகர சபையின் ஆணையாளர்  உட்பட சபையின் உத்தியோகத்தர்கள் சிலரும்  பங்கேற்றிருந்தனர்.

அக்கரைப்பற்று  மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தினசரி குப்பைகள் சேகரித்து அகற்றப்படுவதாக தெரிவித்த மாநகர முதல்வர் சக்கி அதாஉல்லா, அதற்கான செயற்பாடுகள் மற்றும் செலவீனங்கள் தொடர்பில் மேற்படி நிறுவனத்தின் தூதுக்குழுவினருக்கு விபரித்துக் கூறினார்.

இங்குள்ள சனநெரிசல் மற்றும் இட நெருக்கடி காரணமாக தமது மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாதிருப்பதாக சுட்டிக்காட்டிய முதல்வர்,  இதனால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பிரதேசத்தில் பணம் செலுத்தியே குப்பைகளை கொட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான காரணங்களினால் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை முன்னெடுப்பதில் தமது மாநகர சபை எதிர்கொள்கின்ற சவாலை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் இதன்போது முதல்வர் வலியுறுத்தினார்.

அக்கரைப்பற்று  மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் பொருட்டு,  இப்பகுதியில் அன்றாடம் சேர்கின்ற குப்பைகளைக் கொண்டு மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான திட்டத்துக்கு முதலீடு செய்ய தமது நிறுவனம் தயாராக இருக்கிறது என்று தெரிவித்த தூதுக்குழுவினர்,  இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 20 ஏக்கர் நிலம் ஒதுக்கித்தரப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

அக்கரைப்பற்றில் பாரிய நிலத்தட்டுப்பாடு காணப்படுவதனால் இப்பாரிய நிலப்பரப்பை பெற்றுக்கொள்வதென்பது பெரும் சவாலான விடயம் என்று சுட்டிக்காட்டிய முதல்வர் சக்கி அதாவுல்லா, இதற்கு மாற்று வழிகள் குறித்து பரிசீலிக்க முன்வர வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியமான பொறிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கு இணக்கம் தெரிவித்த கொரிய நிறுவனக் குழுவினர்,  தமது உத்தேச மின்சார உற்பத்தித் திட்டம் தொடர்பிலான நகல் வரைபை முதல்வரிடம் கையளித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்