கொழும்பு குப்பையும் ‘கொழுப்பு’ அரசியலும்

🕔 March 26, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

மது கைகளை அகல விரிக்கும் போது, நமக்கான சுதந்திரம் என்பது, அடுத்தவரின் மூக்கை, நமது கைகள் தொடாத வரையில்தான் என்பார்கள்.

நமது சுந்திரம் என்பது, அடுத்தவருக்கு அத்துமீறலாக இருக்கும் போதுதான் முரண்பாடுகளும் பிரச்சினைகளும் எழுகின்றன. ஆனால், அதிகாரம் உள்ளவர்கள், சாதாரண மனிதர்களின் தலைகளில், அநேக தருணங்களில் கூடுகளைக் கூட, கட்டத் தொடங்குகின்றனர். அப்போது, தலைகளுக்கு உரியவர்கள் தட்டிக் கேட்டால், அதிகாரங்களுக்கு உரியவர்களின் கைகள், அடக்குமுறைகளைப் பிரயோகிக்கத் தொடங்குகின்றன. இதுவே, இறுதியில் போராட்டக் களங்களை உருவாக்கி விடுகின்றது.

புத்தளம் மாவட்டத்திலுள்ள அறுவைக்காடு பிரதேசத்தின் சேரக்குழி பகுதியில், திண்மக் கழிவகற்றல் திட்டமொன்றை அரசாங்கம் தொடங்கியுள்ளமை குறித்து நாம் அறிவோம். சேரக்குழி எனும் இடம், புத்தளத்திலிருந்து 26 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்காகவே, சேரக்குழித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக, 101 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இலங்கைக் கணக்கில் சுமார் 18 ஆயிரம் மில்லியன் ரூபாயாகும்.

கொழும்பிலுள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளைத்தான், சேரக்குழியில் கொட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், கொழும்பில் நாளொன்றுக்கு 1,200 மெற்றிக் தொன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றை, சுமார் 170 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சேரக்குழியில் கொட்டுவதே அரசாங்கத்தின் திட்டமாகும். மேற்படி குப்பைகளை, 26 கொள்கலன்களில் அடைத்து, ரயில் மூலம் அனுப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. அது சாத்தியப்படாது போனால், டிப்பர் வாகனங்களில் அனுப்புவதற்கான யோசனையும் உள்ளது. இதற்கான போக்குவரத்துச் செலவு, நாளொன்றுக்கு 04 மில்லியன் ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு 1,440 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

2017ஆம் ஆண்டு, கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்துக்காக, 64 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைத்தான் தமது பகுதியில் ஆரம்பிக்க வேண்டாம் என்று, புத்தளம் மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், அதனை அரசாங்கம் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை. பெரு நகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கீழ்தான் அறுவைக்காடு குப்பைத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குப் பொறுப்பான அமைச்சராக சம்பிக ரணவக்க உள்ளார்.

இந்தத் திட்டமானது, எந்தவிதத் தீங்கையும் ஏற்படுத்தாது என்றும், இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன எனவும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால், புத்தளம் மக்கள் அதனை நம்பத் தயாராக இல்லை.

ஏற்கெனவே, புத்தளம், நுரைச்சோலையில் அனல் மின் நிலையத்தையும் பாலாவியில் சீமெந்துத் தொழிற்சாலையையும் நிர்மாணிக்கும் போதும், மக்களுக்கு ஆபத்துகள் எவையும் ஏற்படாது என்றுதான் அரசாங்கம் கூறியது.

ஆனால், அவற்றின் மூலம் இப்போது மக்களின் சுகாதாரம் சீர்கெட்டுள்ளதோடு, சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அவை போலவே, சேரக்குழியில் கொட்டப்படும் குப்பைகளாலும் பாதிப்பு ஏற்படும் என்று புத்தளம் மாவட்ட மக்கள் கூறுகின்றனர்.

இத்தனைக்கும் இப்போது குப்பை கொட்டுவதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள இடமானது, சீமெந்து உற்பத்திக்காக, மிக நீண்ட காலம் சுண்ணக்கற்கள் தோண்டப்பட்டமையால் பாரிய குழிகள் உருவாகியிருந்த இடமாகும்.

பின்னர், அந்தக் குழிகள் மூடப்பட்டு, அங்கு காடு வளர்க்கப்பட்டது. ஆனால், இப்போது அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் குழிகள் தோண்டப்பட்டு, குப்பை கொட்டுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று அடி தடிப்பமான அடித்தளம், சுற்றிவர சுவர் எழுப்பட்டு, அதற்குள்தான் குப்பைகள் கொட்டப்படவுள்ளன. குப்பைகளுக்குள் நச்சுப் பதார்த்தங்கள், இரசாயனப் பொருள்களும் இருக்கும். குப்பை கொட்டும் அடித்தளத்தில் வெடிப்புகள் ஏற்படுமாயின், குப்பையிலிருந்து வடியும் நீர், நிலத்துக்குள் இறங்கும். அதனால், நிலக்கீழ் நீர் பாதிப்படைவதோடு, ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலையும் அந்த நீர் சென்றடையக் கூடிய ஆபத்துகளும் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

புத்தளம் கடலில் அதிக மீன்கள் பிடிக்கப்படுவதும், கடல் நீரைக் கொண்டு, உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுவதும் நாம் அறிந்தவைதான். எனவே, குப்பையிலிருந்து வடியும் நீரானது கடலில் சேர்வதால், கடலிலிருந்து பெறும் அனைத்தும், நஞ்சாகி விடும் என்பது மக்களின் வாதமாகும்.

மறுபுறம், இந்தக் குப்பை கொட்டப்படவுள்ள இடத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில், கரைத்தீவு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கரைத்தீவானது கிறிஸ்தவ மக்களைக் கொண்ட மீனவக் கிராமமாகும்.

சேரக்குழியில் கொட்டப்படும் குப்பைகளின் நாற்றம்,  அருகிலுள்ள காட்டுப் பகுதியிலிருந்து குப்பைகளை உண்பதற்காக வரும் யானைகளின் அச்சுறுத்தல்கள் என்று, ஏராளமான பிரச்சினைகள், இந்த குப்பைத் திட்டத்தை அண்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.

அறுவைக்காடு – சேரக்குழியில் குப்பை கொட்டும் திட்டத்துக்கு, புத்தளம் மாவட்டத்திலுள்ள சகல மதத் தலைவர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தத் திட்டத்தை வேண்டாம் என்றே கூறுகின்றனர். ஆயினும், ‘முஸ்லிம் மக்கள்தான் இதனை எதிர்க்கின்றார்கள்’ என்பது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதற்கு, சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முயற்சித்து வருகின்றமையையும் காணக்கிடைக்கிறது.

அதற்கு ஒரு காரணமும் உண்டு. அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மிகவும் கடுமையாக எதிர்த்து வருகின்றார். இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதற்குக் காட்டப்படும் அக்கறையைப் பார்க்கும் போது, இதன் பின்னணியில் ‘பிஸ்னஸ் மாபியா’ இருக்கிறதோ என்கிற சந்தேகம் தனக்கு ஏற்படுவதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறியிருக்கின்றார். அமைச்சரின் இந்த எதிர்ப்பைக் காட்டி ‘மேற்படி திட்டத்துக்கு முஸ்லிம்கள் மட்டும்தான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்’ என்பது போன்ற ‘படத்தை’ க் காட்டுவதற்கும் சில சாரார் முயற்சிக்கின்றனர்.

புத்தளம் மாவட்டம் சம்பந்தமான விடயங்களில், இரட்டிப்புக் கவனமெடுத்துச் செயற்பட வேண்டிய தேவை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உள்ளமையை மறுத்து விட முடியாது.

1990களில் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது, புத்தளத்தில் தஞ்சமடைந்தவர்களில் ரிஷாட் பதியுதீனும் ஒருவர்.

வீசிய கையும் வெறுங்கையுமாக வந்த அவர்களை, புத்தளம் முஸ்லிம் மக்கள்தான் ஆதரித்தார்கள். எனவே, புத்தளம் மண்ணுக்கும் மக்களுக்கும் ஆதரவாகச் செயற்பட வேண்டிய தார்மீகக் கடமை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு உள்ளது.

மறுபுறம், ரிஷாட் பதியுதீனின் அரசியல், புத்தளம் மாவட்டத்தையும் அடியொற்றியதாக அமைந்துள்ளது. குறிப்பாக, புத்தளம் மாவட்டத்து முஸ்லிம்களின் விருப்பு – வெறுப்புகளுக்கு மாற்றமாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடந்து கொள்வது, அவரின் அரசியலுக்கு நட்டமாகும்.

எனவே, புத்தளம் மக்களின் எதிர்ப்பிலுள்ள நியாயங்களை விளங்கிக் கொண்டு, அறுவைக்காட்டு குப்பைத் திட்டத்துக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எதிர்ப்பை வெளியிடுகின்றமையால் ஆத்திரமடைந்துள்ளவர்கள், இந்த விடயத்தில் அவரின் வாயை மூடுவதற்காக, அவருக்கு எதிரான ‘வில்பத்து’ விவகாரத்தை, இந்த நேரம் பார்த்துக“ கிளப்பி விட்டுள்ளதாக, அமைச்சரே நாடாளுமன்றில் கூறியுள்ளார்.

அறுவைக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிராக, 200 நாள்களுக்கும் மேலாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்ற போதிலும், அதனை நடைமுறைப்படுத்தியே தீருவதென்பதில், அதற்குப் பொறுப்பான அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடாப்பிடியாக இருக்கின்றார். அதனால் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசுவதற்கு, அந்தத் திட்டத்தை எதிர்க்கும் தரப்பினர் முயற்சித்து வருகின்ற போதிலும், அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இந்தநிலையில், கடந்த 19ஆம் திகதி புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமுகத் திடலுக்கு வந்த நூற்றுக் கணக்கானோர், அறுவைக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிராக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களின் பிரதிநிதிகள் மூலம், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்குத் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் சமர்ப்பித்தார்கள். மேலும், இது விடயத்தில் பேசுவதற்கு, ஜனாதிபதியின் நேரத்தை ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதேவேளை, தமது கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்க்காமல் போனால், 22ஆம் திகதி புத்தளத்துக்கு ஜனாதிபதி வருவதற்குத் திட்டமிட்டுள்ளமையை மீள்பரிசீலிக்க வேண்டிவரும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்திருந்தனர்.

இந்தப் பின்னணியில்தான், கடந்த வெள்ளிக்கிழமை (22) புத்தளத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார். அப்போது குப்பைத் திட்டத்துக்கு எதிரானவர்கள் கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியபடி கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

புத்தளத்தில் அன்றைய தினம், நான்கு நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்வதாக ஏற்பாடாகியிருந்தது. ஆயினும், மக்களின் இந்தக் கவனயீர்ப்பு நடவவடிக்கை காரணமாக, புத்தளம் நகரசபை மைதானத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில், ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை.

“இந்த நிலையில், புத்தளம் சக்தி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார். அப்போது அவருடன் பேசுவதற்கு, நேரம் பெற்றுத் தருவதாக, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரியொருவர் எமக்கு வாக்குறுதியளித்து, எம்மில் ஐந்து பேரை அங்கு வருமாறு அழைத்தார். அதன்படி அங்கு சென்றோம். ஆனால், எம்முடன் பேசாமலேயே ஜனாதிபதி சென்று விட்டார்” என்று ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான எச். அஜ்மல் தெரிவித்தார்.

இதன்பிறகுதான், மக்கள் ஆவேசமடைந்ததாகவும் அவர்கள் மீது, பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் வருகையின் போது, கவனயீர்ப்பு நடவடிக்கையில் மக்கள் ஈடுபடப் போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட பொலிஸார், அதனைத் தடுப்பதற்கான ஆணையொன்றை நீதிமன்றில் பெற்றிருந்தனர். அதையும் மீறியே, மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் எனத் தெரிவித்தே, மக்களின் கவனயீர்ப்பு நடவடிக்கைக்கான தடையுத்தரவை நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றிருந்தனர். ஆனால், அவ்வாறான எதுவித இடையூறுகளையும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் ஏற்படுத்தவில்லை” என்றும், ‘க்ளீன் புத்தளம்’ செயற்பாட்டாளர் அஜ்மல் மேலும் கூறினார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான், கவனயீர்ப்பில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் கடுமையான தாக்குதல்களை நடத்தினார்கள். அதன் உச்சக்கட்டமாக, பெண்களையும் பொலிஸார் தாக்கிய காட்சிகளை, ஊடகங்களில் காணக்கிடைத்தன.    பொலிஸாரின் இந்த அடாவடித்தனமான தாக்குதல் நடவடிக்கைக்கு எதிராக, பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும், மக்களின் அமைதிப் போராட்டம் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில், தனது கவலையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெருங்கனவுகளோடு மக்கள் உருவாக்கிய நல்லாட்சியானது, ‘கழுதை தேய்ந்து கட்டெறுப்பான’ கதையாகிப் போனமை ஒருபுறமிருக்க, தாம் உருவாக்கிய ஆட்சியாளரைச் சந்திப்பதற்கு, சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிய மக்கள் மீது, ஈவிரக்கமற்று பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளமையை, பாதிக்கப்பட்ட மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இன்னொருபுறம், சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அரசியல் குழப்பத்தின் போது, ஜனநாயகத்துக்காகப் போராடியதாகக் கூறிக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும், பொலிஸாரின் இந்த அடக்குமுறையைக் கண்ட பிறகும், வாய்மூடி இருக்கின்றமை குறித்தும் விமர்சனங்கள் உள்ளன.

தமது ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் வந்து விடுமோ என்கிற பயத்திலும், தாங்கள் வாழுமிடம் ஆபத்துக்குள் சிக்கி விடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடனும் போராடி வருகின்ற புத்தளம் மக்களுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்திலுள்ள 20 முஸ்லிம் உறுப்பினர்களாவது, ஆகக்குறைந்தது ஏன் ஒற்றுமைப்படக் கூடாது என்கிற கேள்வியைச் சட்டமாணி வை.எல்.எஸ். ஹமீட் முன்வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், நம்மவர் ‘குடுமி’கள் ஆதாயமில்லாமல், ஆடுமா என்பதில்தான் சந்தேகம் உள்ளது.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (26 மார்ச் 2019) 

Comments