தேசிய காங்கிரஸின் நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கூட்டாக ராஜிநாமா; அதிர்ந்தது அட்டாளைச்சேனை

🕔 March 17, 2019

– றிசாத் ஏ காதர் –

தேசிய காங்கிரஸ் கட்சியின் நூற்றுக் கணக்கான முக்கியஸ்தர்கள், அந்தக் கட்சியிலிருந்து கூட்டாக ராஜிநாமா செய்யும் நிகழ்வு, அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, அந்தக் கட்சியிலிருந்து அண்மையில் ராஜினாமாச் செய்திருந்தார்.

இதனையடுத்து, தேசிய காங்கிரஸின் சட்ட விவகாரங்களுக்கான செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையிலேயே, மேற்படி கட்சியிலிருந்து அட்டாளைச்சேனை, பொத்துவில் மற்றும் மூதூர் பிரதேசத்தை சேர்ந்த அக் உயர்பீட உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் இன்றைய தினம் கூட்டாக ராஜினாமாச் செய்தனர். 

தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளராகவிருந்த ஏ.எல். பைறூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸின் பிரதேச, வட்டார, கிளைக் குழுக்களின் அமைப்பாளர்கள் மற்றும் தலைவர்கள் என ஏராளமானவர்கள் தமது ராஜினாமாக் கடிதங்களை, தேசிய காங்கிரஸ் தலைவருக்கு அனுப்பி வைக்கும் பொருட்டு, முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையிடம் கையளித்தனர்.

தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளராகவும், பிரதித் தலைவராகவும் பதவி வகித்த எம்.எஸ். உதுமாலெவ்வை, அந்தக் கட்சியிலிருந்து விலகிக் கொண்டமையினை அடுத்தே, தாங்களும் அக் கட்சியிலிருந்து ராஜிநாமாச் செய்வதாக, இன்றைய தினம் கூட்டாக ராஜிநாமா செய்தோர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமான ஏ. பதுர்கான் உட்பட பொத்துவில் மத்திய குழுவினர் இதன்போது, தேசிய காங்கிரஸிலிருந்து விலகிக் கொண்டதாக அறிவித்தனர்.

அதேபோன்று, தேசிய காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம். நவாஸ் உட்பட அப்பிரதேச மத்திய குழுவினர் அனைவரும், அந்தக் கட்சியிலிருந்து இன்றைய தினம் ராஜினாமாச் செய்திருந்தனர்.

இவ்வாறு, இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் தேசிய காங்கிரஸிலிருந்து விலகிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பானசெய்தி: தேசிய காங்கிரஸிலிருந்து விலகி விட்டேன்: முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்