இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரும், மஹிந்த ராஜபக்ஷவின் மனு விசாரணைக்கு

🕔 December 14, 2018

ஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளை வகிப்பதற்கும் விதிக்கப்பட்டள்ள இடைகால தடையுத்தரவை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, இன்று வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு, சட்டவிதிமுறைகளுக்கு ஏற்புடையது அல்லவென தெரிவித்தே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிவாதிகளாக ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 121 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மனு மீதான விசாரணைகள் நீதியரசர்களான ஈவா வணசுந்தர, புவனேக அலுவிஹாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எனினும், இந்த வழக்கு விசாரணை தொடர்பில் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மற்றுமொரு மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

உயர்நீதிமன்ற நீதியரசர் ஈவா வணசுந்தர முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என, ரணில் விக்ரமசிங்க தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 121 உறுப்பினர்கள் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைகளுக்கு ஈவா வணசுந்தரவை இணைத்துக்கொள்ளும் பட்சத்தில், நியாயமான விசாரணையொன்றை எதிர்பார்க்க முடியாது என அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் குறித்த நீதியரசர்கள் குழாமிலிருந்து ஈவா வணசுந்தரவை நீக்குமாறும் அந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதேவேளை, தனது பதவியிலிருந்து ஓய்வூ பெறவுள்ளதாக நீதியரசர் ஈவா வணசுந்தர தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்று வருகின்ற வழக்கு விசாரணைகளின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீதியரசரான ஈவா வணசுந்தர, தனது 40 வருட நீதித்துறையிலிருந்து இன்றைய தினம் ஓய்வு பெறவுள்ளதாக நீதியரசர் புவனேக அலுவிகாரே அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்