ரணிலுக்கு வாக்களிக்காதது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் விளக்கம்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதற்கான எந்தவித நிபந்தனைகளையும் விதிக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முன்வந்ததால்தான், நேற்றைய தினம் நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை நிரூபிக்கும் யோசனையின் அடிப்படையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், தான் கலந்து கொள்ளவில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பி்னர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடியில் எந்தவொரு தரப்புக்கும் ஆதரவளிப்பதில்லை என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) சில வாரங்களுக்கு முன்னர் கூடி தீர்மானம் எடுத்திருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறினார்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் வகையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமைக்குரிய காரணம் என்னவென பிபிசி வினவியபோதே, அவர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; “ரணில் விக்ரமசிங்கவும், மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்களுக்கு வழங்கிய எந்தவித வாக்குறுதிகளும், இந்த அரசாங்கத்தின் மூன்றரை வருடத்திலும் நிறைவேற்றப்படவில்லை.
அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எவையும் கிடைக்கவில்லை.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அமெரிக்கா, இந்தியா போன்ற சர்வதேச நாடுகளின் கொழும்பிலுள்ள ராஜதந்திரிகளை அணுகி, தற்போதுள்ள அரசியல் நெருக்கடியை தீர்க்குமாறு வலியுறுத்துவதோடு, தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்வதில், அந்த நாடுகளை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களாக செயற்படுமாறும் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “தேசிய அரசியல் நெருக்கடியில் அரசியலமைப்பும் ஜனநாயகமும் மீற்பட்டுள்ளதை எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் ஏற்றுக் கொள்கிறது”
“ஆனால் கடந்த 70 வருடங்களாக இந்த நாட்டினை ஆட்சி செய்த இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுகள் எவற்றினையும் வழங்கவில்லை. எனவே, தற்போது உருவாகியுள்ள அரிய சந்தர்ப்பத்தை சம்பந்தன் பயன்படுத்தியிருக்க வேண்டும். வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தற்போதைய அரசியல் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரிக்கை விடுப்பதோடு, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அனுசரணையாளர்களாக அல்லது மத்தியஸ்தர்களாகவும் பணியாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும் என்பதுதான் எமது கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் எடுத்த முடிவாகும்”.
அதாவது, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நாம் அணுகும் சர்வதேச நாடுகளை, தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தர்களாக வைத்துக் கொள்வது என்கிற நிபந்தனையின் அடிப்படையில், தேசிய அரசியல் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட ஒரு தரப்புக்கு ஆதரவு வழங்கியிருக்கலாம்.
2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், எந்த நிபந்தனைகளும் இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்தவர்கள் மூன்றரை வருடங்களாகியும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதனையும் வழங்கவில்லை.
எனவே, 2015ஆம் ஆண்டு எமக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விட்டமை போன்று, தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தையும் சம்பந்தன் தவற விடக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும்.
வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்து தற்போதைய நிலவரத்தை சாதுரியமாகக் கையாள வேண்டியதன் அவசியம் குறித்து, எமது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிக்கையொன்றின் மூலம் வலியுறுத்தியிருந்தது.
அந்த அறிக்கை வெளியாகி மூன்று வாரங்களின் பின்னர், 14 நாடுகளின் ராஜதந்திரிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சந்தித்த போதும், அதன்போது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை குறித்து எதுவும் அவர் பேசவில்லை. அரசியலமைப்பு மீறல் மற்றும் ஜனநாயக மீறல் பற்றி மட்டுமே அவர் அங்கு பேசினார்.
அதனால்தான், நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் நான் கலந்து கொள்ளவில்லை” என்றார் சிவசக்தி ஆனந்தன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளபோதும், 14 உறுப்பினர்கள்தான் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மையினை தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், கலந்து கொண்டு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
ஏனைய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஸ். வியாழேந்திரன் என்பவர் ஏற்கனவே, மஹிந்த தரப்புக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து பிரதியமைச்சர் பதவியயைப் பெற்றார்.
மற்றைய உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன், நேற்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.
நன்றி: பிபிசி