கண்ணீரில் மிதக்கும் அரசியல் துறைமுகம்

🕔 October 9, 2018

– முகம்மது தம்பி மரைக்கார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் பெருங்கனவாக, ஒலுவில் துறைமுகம் இருந்தது. ஆனால், அதே துறைமுகத்தை மூடிவிடுமாறு, அவருடைய கட்சியைச் சேர்ந்த பிரதியமைச்சர் பைஸால் காசிம் இப்போது கூறுகிறார். அந்தத் துறைமுகம் இருந்தால், ஒலுவில் பிரதேசமும் தனது சொந்த ஊரான நிந்தவூர் உள்ளிட்ட சில பிரதேசங்களும் கடலரிப்பால் அழிந்து போய்விடும் என்று, அவர் அச்சப்படுகின்றார். அஷ்ரப் ஆசைப்பட்ட ஒரு விடயம், பைஸால் காசிமுக்கு எப்படித் தேவையில்லாமல் போயிற்று என்கிற கேள்வி, இங்கு முக்கியமானதாகும். இந்த ஆச்சரியத்தை, காலம் நிகழ்த்தியிருக்கிறது.

இன்னொருபுறமாக, பைஸால் காசிம், “மூட வேண்டும்” என்று கூறிய துறைமுகத்தை, “ஒருபோதும் மூடப் போவதில்லை” என்று, துறைமுகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருக்கிறார். அமைச்சரை, மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், ஒலுவிலுக்குக் கடந்த வாரம் அழைத்து வந்திருந்தபோதே, இதனை அவர் தெரிவித்திருந்தமை கவனத்துக்குரியதாகும்.

ஒலுவில் துறைமுகத்துக்கு, இருபது வயதாகிறது. 1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி, அப்போது துறைமுகங்கள் அமைச்சராக இருந்த எம்.எச்.எம். அஷ்ரப், வர்த்தமானி அறிவித்தல் மூலம், இந்தத் துறைமுகத்தைப் பிரகடனப்படுத்தினார். எவ்வாறாயினும் 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால்தான், இந்தத் துறைமுகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்தத் துறைமுக நிர்மாணத்துக்காக, ஒலுவிலையும் அதனை அண்டிய பாலமுனையையும் சேர்ந்த பிரதேச மக்களுக்குச் சொந்தமான சுமார் 125 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. அதற்காக, அரசாங்கம் நட்டஈடு வழங்கிய போதிலும், சில காணி உரிமையாளர்களுக்கு, இன்னும் நட்டஈடு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இன்னொருபுறம், துறைமுக நிர்மாணம் காரணமாக, இந்தப் பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் தொழிலும் பாதிக்கப்பட்டது.

ஒலுவில் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான நிதியை, டென்மார்க் அரசுதான் வழங்கியது. சுமார் 46 மில்லியன் யூரோவை, வட்டியில்லாக் கடனாக, இதற்காக இலங்கை பெற்றுக்கொண்டது. இன்றைய நாணயப் பெறுமதியில் இந்தத் தொகையானது, 8,550 மில்லியன் ரூபாயாகும். துறைமுகம் செயற்படத் தொடங்கி, 6ஆவது மாதத்திலிருந்து 10 ஆண்டுகளுக்குள், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்பது நிபந்தனையாகும்.

ஒலுவில் துறைமுகமானது, வர்த்தகம், மீன்பிடி என்று, இரண்டு பகுதிகளைக் கொண்டது. இவற்றில் வர்த்தகத் துறைமுகம், இதுவரை செயற்படத் தொடங்கவில்லை. மீன்பிடித் துறைமுகம், அரைகுறையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஒலுவில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதிலிருந்து, அந்தப் பிரதேசத்தில் கடுமையான கடலரிப்பு ஏற்பட்டுள்ளதென, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால், பல நூறு மீற்றர் நிலப்பரப்பை, கடல் விழுங்கிவிட்டது. இதனையடுத்து, கடலரிப்பைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக, ஒலுவில் பிரதேசக் கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளில், பாறாங்கற்கள் போடப்பட்டன. ஆனாலும், கடலரிப்பின் தீவிரம் குறையவேயில்லை. பாறாங்கற்கள் போடப்படாத பகுதிகளிலும், ஒலுவிலை அண்டிய நிந்தவூர் பிரதேசத்திலும், கடலரிப்புத் தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

இன்னொருபுறமாக, மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகுகள் கடலுக்குள் நுழையும் பாதையை, மணல் மூடியுள்ளது. இதனால், மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் படகுகளுக்கு, கடலுக்குள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை காரணமாக, அந்தப் படகு உரிமையாளர்களின் தொழில்கள், பல மாதங்களாகப் பாதிப்படைந்துள்ளன. முன்னரும் பல தடவைகள், துறைமுகத்தின் படகுப் பாதையை இவ்வாறு மணல் மூடியபோது, அதனை அரசாங்கம் அகற்றிக் கொடுத்திருக்கிறது. அதேபோல், மீனவர்களும் தமது சொந்தச் செலவில் மணலை அகற்றியிருக்கின்றனர்.

இந்த நிலையில், மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றுமாறு, மிக நீண்டநாள்களாக மீனவர்கள் விடுத்து வந்த கோரிக்கையை அடுத்து, மணலை அகற்றிக் கொடுப்பதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த வாரம், ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்திருந்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இந்த உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறார். இதன்போது தான், ஒலுவில் துறைமுகம் ஒருபோதும் மூடப்படாது என்றும், அமைச்சர் சமரசிங்க தெரிவித்திருந்தார்.

ஆனால் மறுபுறமாக, “ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்ட பின்னர்தான், மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்ற வேண்டும்” எனக் கூறி, வர்த்தகத் துறைமுக வாயிலுக்கு முன்பாக, ஒலுவில் பிரதேச மக்கள், கடந்த ஐந்து நாள்களாக, கூடாரம் அமைத்து சத்தியாக்கிரப் போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னொருபுறமாக, மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணலை உடனடியாக அகற்றுமாறு கோரி, அங்கு தரித்து நிற்கும் படகு உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து, மீன்பிடித் துறைமுக நுழைவாயிலுக்கு முன்னால், தொடர்ச்சியான கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனால், கடந்த சில நாள்களாக, ஒலுவில் துறைமுகப் பகுதி, பரபரப்பாகவும் கொதிநிலையியிலும் இருந்து வருகிறது.

ஒலுவில் துறைமுகமானது, “அரசியல் துறைமுகம்” என்கிறதொரு விமர்சனம், மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது. துறைமுகமொன்று அமைப்பதற்குப் பொருத்தமற்ற ஓர் இடத்தில், மேற்படி துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதெனவும் கூறப்படுகிறது. இதனை, மு.காவின் பிரதியமைச்சர் பைஸால் காசிம், அண்மையில் ஊடகங்களுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்றின் மூலம் உறுதிப்படுத்தியிருக்கின்றார். “கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதியே, ஒலுவில் துறைமுகத் திட்டத்தை அஷ்ரப் முன்னெடுத்தார். ஆனால், இதில் உள்ள பாதகங்கள் பற்றி, அப்போதிருந்த அதிகாரிகளால் அல்லது அரசாங்கத்தால், அஷ்ரப்புக்குச் சொல்லப்படவில்லை என்று, நான் இப்போது உணர்கிறேன். அப்படிச் சொல்லப்பட்டிருந்தால், இந்தத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு அஷ்ரப் இணங்கியிருக்க மாட்டார்” என்று, அந்தப் பேட்டியில் பைஸால் காசிம் கூறியிருக்கின்றார்.

இது முக்கியமானதொரு விடயமாகும். பிரதியமைச்சரின் கூற்றின்படி, ஒலுவிலில் துறைமுகத்தை நிர்மாணித்தால் பல்வேறு பாதங்கள் ஏற்படும் என்பதை, அப்போதிருந்த அதிகாரிகள் அறிந்தே இருந்திருக்கின்றார்கள். ஆனால் அதை, “அஷ்ரப்பிடம் அவர்கள் கூறவில்லை” என்கிறார் பிரதியமைச்சர். பல்லாயிரம் மில்லியன் ரூபாய்களைச் செலவுசெய்து நிர்மாணிக்கப்படும் ஒரு துறைமுகமானது, பல்வேறு பாதங்களை அப்பிரதேசத்துக்கு ஏற்படுத்தும் என்பதை, பிரதியமைச்சர் கூறுகின்றமை போல், அந்த அதிகாரிகள் ஏன் சொல்லாமல் மறைத்தார்கள் என்பது கேள்விக்குரியதாகும். மேலும், இப்படியொரு பாரதூரமான விடயத்தை, மு.காவின் ஸ்தாபகத் தலைவரும் அப்போதைய அமைச்சருமான அஷ்ரப் அறிந்திருக்கவில்லை என்று பிரதியமைச்சர் பைஸால் காசிம் கூறுவது, ஏற்புடையதுதானா என்கிற கேள்வியும், இங்கு எழுந்து நிற்கிறது.

எது எவ்வாறாயினும், “ஒலுவில் துறைமுகத்தால் ஏற்படப்போகும் பாதங்கள் அறியப்பட்ட நிலையில்தான் அந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டது” என்கிற விமர்சனங்களுடனும் குற்றச்சாட்டுகளுடனும், பிரதியமைச்சர் பைஸால் காசிம் தெரிவித்துள்ள தகவல்கள் ஒத்துப் போகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஒலுவில் துறைமுகத்தால், இப்போது அரசாங்கத்துக்கு வருமானமில்லை. இன்னொருபுறம், இந்தத் துறைமுகத்தை வைத்துக் கொண்டிருப்பதால், ஒலுவிலும் அதற்கு அடுத்துள்ள பிரதேசங்களும் கடலரிப்பால் அழிந்து கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், பிரதியமைச்சர் பைஸால் காசிம் கூறியமை போல், இந்தத் துறைமுகத்தை மூடிவிடுவதுதான் இவற்றுக்கெல்லாம் தீர்வாக அமையுமா, அப்படி மூடிவிட்டால், எல்லாம் சரியாகி விடுமா என்கிற கேள்விகள், இங்கு முக்கியமானவையாகும்.

ஒலுவில் துறைமுகத்தை வெற்றிகரமாகச் செயற்படுத்தும் எண்ணம், எந்தவோர் அரசாங்கத்திடமும் இதுவரையில் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “ஒலுவில் துறைமுகத்தை வெற்றிகரமாக இயங்கச் செய்து, அந்தப் பகுதியை வர்த்தகம் செழிக்கும் பிராந்தியமாக மாற்றுவேன்” என்று, பிரசார மேடையில் வாக்குறுதி வழங்கியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது. இருந்தபோதும், பிரதமரின் உறுதிமொழியைச் சாத்தியப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

ஒலுவில் துறைமுகமானது, மு.காவின் தலைவர் அஷ்ரப்பினுடைய கனவு என்று கூறப்படுகிறது. துறைமுகம் அமைந்துள்ள அம்பாறை மாவட்டத்தில், மு.காவின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் இருவர், பிரதியமைச்சர்கள். மேலும், அரசாங்கத்தின் பங்காளியாகவும் மு.கா இருந்து வருகிறது. இவ்வாறானதொரு நிலையில், “ஒலுவில் துறைமுகத்தை மூடிவிட வேண்டும்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதியமைச்சர் பைஸால் காசிம் கூறியிருப்பது, “ஒலுவில் துறைமுகம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தோல்வி கண்டுள்ளதா?” என்கிற கேள்வியை, அங்குள்ள மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டமையால், அப்பிரதேசத்தில் கடலரிப்புத் தீவிரமடைந்துள்ளது என்பதற்காக, “ஒலுவில் துறைமுகத்தை மூடிவிடுங்கள்” என்று கூறுவது, பொருத்தமான தீர்வாக அமையாது. கடலரிப்பையும் கட்டுப்படுத்தி, துறைமுகத்தையும் வெற்றிகரமானதாகச் செயற்பட வைக்க வேண்டும். அதற்குரிய அழுத்தத்தைத்தான், அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்கிற வகையில், மு.கா கொடுக்க வேண்டும் என்பது, மக்களின் கருத்தாக உள்ளது.

இதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் படகுகளின் உரிமையாளர்களுக்கும், ஒலுவில் பிரதேச மக்களுக்கும் இடையில் பிரச்சினையொன்றை ஏற்படுத்தி விடுவதற்கான அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மீன்பிடித் துறைமுகத்திலுள்ள படகு உரிமையாளர்களில் அதிகமானோர், வெளிப் பிரதேசத்தவர்கள். குறிப்பாக, இவர்களில் அதிகமானோர், கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள், மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியிருக்கும் மணலைத் தோண்டுமாறு வலியுறுத்துகின்றனர். ஆனால், ஒலுவில் மக்களோ, தமது பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் கடலரிப்புக்குத் தீர்வு காணப்படாமல், மீன்பிடித் துறைமுகத்திலுள்ள மணலைத் தோண்டக் கூடாது என்று வாதிடுகின்றனர். இந்த முரண்பாட்டை வைத்து, தமக்குச் சாதகமாக அரசியல் செய்வதற்கு யாரேனும் முற்படுவார்களாயின், அது கண்டனத்துக்குரியதாகும்.

எவ்வாறாயினும், ஒலுவில் துறைமுகத்தின் அனைத்துத் திசைகளிலும், அரசியல் பரவிக் கிடக்கிறது என்கிற கசப்பான உண்மையையும் இங்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது. ஒலுவில் துறைமுகத்தை வெற்றிகரமாக இயங்கச் செய்வதற்கும், ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதற்கும், அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க முடியாமல் போன, தமது கட்சிகளையும் கட்சித் தலைவர்களையும் காப்பாற்றுவதற்காக, ஒலுவில் பிரதேசத்துப் பிரமுகர்கள் மேற்கொண்ட அரசியல் முயற்சிகளும், ஒலுவிலின் தற்போதைய நிலைக்குக் காரணமாகும்.

எனவே, கட்சி அரசியலுக்கு அப்பால் நின்றுதான், ஒலுவில் துறைமுக விவகாரத்துக்கான தீர்வுகள் காணப்படுதல் வேண்டும். தமக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தராத, அல்லது பெற்றுத் தர முயல்வது போல் காட்டுகின்ற அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத் தரும் வரையில், எந்த அரசியல்வாதியையும் தாங்கள் ஆதரிப்பதில்லை என்று, அந்த ஊர் மக்கள் எடுத்த முடிவைப் போல், ஒலுவில் மக்களும் ஒன்று திரண்டு முடிவெடுக்க வேண்டும்.

ஒலுவில் துறைமுகத்தை, அந்தப் பிரதேச மக்கள் இழந்து விடக் கூடாது. கொழும்பில், புதிதாக துறைமுக நகரமொன்றையே உருவாக்க முடியும் போது, ஒலுவில் துறைமுகத்தை வெற்றிகரமாக இயங்கச் செய்வதும், அந்தப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதென்பதும், சாத்தியமில்லாத விடயங்களல்ல.

உரியவர்கள் மனது வைத்தால், இவை அத்தனையும் நடக்கும் என்பதை, மக்கள் மறந்து விடக் கூடாது.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (09 ஒக்டோபர் 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்