அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக, மீனவர்கள் தொடர் போராட்டம்

🕔 October 9, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடற்றொழிலாளர்கள் நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.

நேற்றைய தினம்பெருந் தொகையான கடற்றொழிலாளர் தமது படகுகளை வீதியின் குறுக்காக வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்து கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களே இந்த வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதன் காரணமாக, அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டமையினால், வாகனங்கள் மாற்று வழியினூடாக பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் படகுகள் பயணம் செய்வதற்கு தடையேற்படுத்தும் வகையில், துறைமுக வாயிலை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரியே, இவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பிரதேச செயலகத்தின் பிதான வாயிற் கதவுக்கும் அவர்கள் பூட்டிட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலுவில் துறைமுகத்துக்கு வருகை தந்த துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, மீன்பிடித் துறைமுகத்தை மூடியுள்ள மணல் அகற்றப்படும் என்று உறுதியளித்திருந்த நிலையில், அந்தப் பணியினை மேற்கொள்வதற்கான கப்லொன்றும் ஒலுவில் துறைமுகத்துக்கு வந்திருந்தது.

இந்த நிலையில், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே, மீன்பிடித் துறைமுகத்தை மூடியிருக்கும் மணலை அகற்ற வேண்டுமென, ஒலுவில் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, அதனை வலியுறுத்தும் வகையில், கடந்த நான்கு நாட்களாக சாத்வீகப் போராட்டமொன்றிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் தலைமையில் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் காணுமாறு, அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஒலுவில் துறைமுகத்துக்கு வந்திருந்த போது பணிப்புரை வழங்கப்பட்டது.

இதன் பின்னர், அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளரின் தலைமையில் இது தொடர்பாக ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒலுவில் பிரதேச மக்களின் பிரதிநிதிகளும், கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட போதும், எதுவித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இதன் காரணமாகவே, கடற்றொழிலாளர்கள் நேற்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீதியினை மறித்து, போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என, அங்கு வருகை தந்த பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்ட போதும், கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் வீதி மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்தமைக்கு அமைய, மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாமலும் அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையிலும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளுமாறு, நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தது.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், பொலிஸ் அதிகாரிகள், மற்றும் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேச்சுவார்த்தையொன்றிலும் ஈடுபட்டனர்.

இதன் முடிவில், மீன்பிடித்துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கு, அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆயினும், இந்த அனுமதியினை எழுத்து மூலம் வழங்குமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்த போதும், அவ்வாறு எழுத்து மூலம் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, வீதியினை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள், போக்குவரத்துக்கு வழி விடும் வகையில் வீதியின் ஓரமாக தமது படகுகளை வைத்துக் கொண்டு, தமது போராட்டத்தினை, இன்றை தினமும் தொடர்ந்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்