முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம்: அமைச்சர் றிசாத்தின் முயற்சிக்கு பலன்

🕔 October 3, 2018

ன்னார் முசலியில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்குமாறு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகமவிடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டமையை தொடர்ந்து, இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரிடம், திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரியங்க பெரேரா, முசலியில் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

“யுத்தத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம், சமாதானம் ஏற்பட்ட பின்னர், படிப்படியாக வழமை நிலைக்குத் திரும்பி வருகிறது. அங்கு வாழ்கின்ற மக்கள் தற்போது தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்து வருகின்றனர். மன்னார் மாவட்டம் கடல் வளங்களை கொண்ட மாவட்டமாக இருப்பதால், அங்கு வாழும் கணிசமான மக்கள் மீனவத் தொழிலை பிரதான தொழிலாகக் கொண்டு ஜீவனோபாயம் நடத்தி வருகின்றனர்.

யுத்தத்தின் காரணமாக பல தசாப்தங்களுக்கு மேலாக இங்குள்ள மக்களின் கல்விநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் வகையில், இந்தப் பிரதேசத்தில் கடல்சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்துத் தந்து, மாணவ சமுதாயத்தின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றேன்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சிலாவத்துறை, அரிப்பு, கொண்டச்சி, நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வங்காலை, மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தலைமன்னார், பேசாலை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள விடத்தல்தீவு, இலுப்பக்கடவை ஆகியன கடல்சார்ந்த கிராமங்களாகும்.

இந்த வகையில் மன்னார் – முசலியில் இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பதன் மூலம், எதிர்காலத்தில் பல்வேறு பலாபலன்களை பெற்றுக்கொள்ள முடியும்” எனவும் கடல்சார் தொழிற்துறைகள் விருத்தியடைய இது வழிவகுக்குமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சர் கலாநிதி அமுனுகமவிடம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்