அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தின் மோசடி: ஆதாரம் அம்பலம்

🕔 August 10, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாத் நபி போட்டி நிகழ்ச்சிகளில் முதலாமிடங்களை வழங்குவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மோசடியாக நடந்து கொண்டமை குறித்து, ‘புதிது’ செய்தித் தளம் ஏற்கனவே செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பாகவுள்ள உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் என்பவர், இந்த மோசடியை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

24 பாடசாலைகளைக் கொண்ட அக்கரைப்பற்றுக் கோட்டத்துக்கு 52 முதலிடங்களையும், 27 பாடசாலைகளைக் கொண்ட அட்டாளைச்சேனை கோட்டத்துக்கு 19 முதலிடங்களையும், 21 பாடசாலைகளைக் கொண்ட பொத்துவில் கோட்டத்துக்கு ஒரேயொரு முதலிடமும் இதன்போது வழங்கப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் என்பவர், தனது பிரதேச பாடசாலைகளுக்கு அதிக முதலிடங்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதேவேளை, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், அக்கரைப்பற்று பிரதேச வாதத்துடன் இயங்கி வருவதாகவும், ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலை நிருவாகங்கள் குற்றம்சாட்டி வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேற்படி மீலாத் நபி போட்டி நிகழ்வுகளில் முதலிடங்களைப் பெற்றோரின் பட்டியல் அவசரமாகவும் பொய்யாகவும் தயாரிக்கப்பட்டமையினால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மாணவியொருவரும் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இது குறித்து, நாம் முன்னர் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள, மேற்படி ஒலுவில் ஜாயிஸா மகளிர் வித்தியாலய மாணவி ஹம்தி என்பவர், குறித்த போட்டியில் கலந்து கொள்வில்லை என்பதை, அவரின் கையெழுத்தில் உறுதிப்படுத்தி வழங்கியுள்ளார்.

இதேவேளை, குறித்த மாணவி வழங்கிய எழுத்து மூல ஆவணத்தை பகிரங்கப்படுத்துமாறு, நாம் முன்னர் வெளியிட்ட செய்தியினை வாசித்த பலரும் கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க, அந்த மாணவியின் கடிதத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

இது இவ்வாறிருக்க, மேற்படி மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் உண்மையாகவே முதலிடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்ப்பட்டியல் அறிவிக்கப்படும் வரை, அல்லது நடத்தப்பட்ட மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக மீண்டும் போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படும் வரை, இது தொடர்பான செய்திகளை தொடர்ந்தும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிடும்.

மேலும், கல்வி அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி மட்டத்துக்கும், இவ்விடயத்தை எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளையும் பொறுப்புவாய்ந்த ஓர் ஊடகம் எனும் வகையில் ‘புதிது’ செய்தித்தளம் மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்பான செய்தி: மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி

Comments