கிழக்கு மாகாண நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தினார்: நாடாளுமன்றில் அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

🕔 June 20, 2018

 கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் நடவடிக்கைககளின் பொருட்டு வீணாக செலவிட்டதாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் சகவாழ்வு பிரதியமைச்சர் அலிசாஹிர் மெளலான தெரிவித்தார்.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ சபையில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அரசாங்க கணக்கு குழுவின் ஊடாக 2015 ஆம் ஆண்டுக்கான 842 நிறுவனங்கள் தொடர்பாக பரிசீலனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நானும் உள்ளேன். இந்த பரிசீலனையின் போது கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி, ஏறாவூர் உள்ளூராட்சி மன்றங்களின் கணக்கு செலவுகள் தொடர்பில் முரண்பாடான நிலைமை காணப்படுகிறது.

இதன்படி கிழக்கு மாகாண உள்ளூராட்சி சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை, முன்னாள் முதலமைச்சர் தனது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்தது.

இது தொடர்பாக பூரண அறிக்கையொன்றை பெற்றுத் தருமாறு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரிய போதும் இன்னும் அதற்கான பதில் அறிக்கை கிடைக்கவில்லை” என்றார்.

பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா – முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்