எம்பிலிபிட்டிய பகுதியில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்படும்: சப்ரகமுவ ஆளுநர் நிலுக்கா தெரிவிப்பு

🕔 May 26, 2018

ம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு முற்றாகத் தடைவிதிக்கப்படும் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகாரையில், வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து மாகாண ஆளுநரிடம் சில கருத்துகளை முன்வைத்து உரையாற்றிய எம்பிலிபிட்டிய ஸ்ரீ போதிராஜாராம விகராதிபதி கலாநிதி ஓமல்பே சோபித தேரர்; கடந்த ஏழு வருடங்களாக, எம்பிலிபிட்டிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மாடு வெட்டுவதற்கும் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

ஆனால் எம்பிலிபிட்டிய நகர சபை,  தற்போது அந்தத் தடையை நீக்கியுள்ளது என்றும் இதனால் சமூகங்களுக்கிடையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.

பசு மாடுகளை பாதுகாக்கும் திட்டத்தை, ஸ்ரீ போதிராஜாராம அமைப்பின் மூலம் கோவுல்ஆர பிரதேசத்தில் ஆரம்பித்துள்ளதாகக் கூறிய அவர்,  தற்போது அந்த இடத்தில் 150 பசுக்கள் உள்ளன என்றும் நீதிமன்றத்தின் ஊடாகவும் மற்றும் இலவசமாக அன்பளிப்புச் செய்யும் பசுக்களை இவ்வாறு பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்தார்.

“கடந்த காலங்களில் 400க்கும் அதிகமான பசுக்களை, ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளோம். அத்தோடு, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலைகளைத் திறக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறோம்.

எம்பிலிபிட்டிய நகர சபையின் மூலம், கடந்த 07 வருடங்கள் தடை செய்யப்பட்டிருந்த மாட்டிறைச்சி விற்பனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை எம்பிலிப்பிட்டிய நகரசபை வழங்கியுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை  உடனடியாக  நீக்கி, எம்பிலிட்டிய பிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதை முற்றாக ஒழிப்பதற்கு நடவடிக்கை வேண்டும்” எனவும் அவர் இதன்போது, கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க;

காலநிதி ஓமல்பே சோபித தேரர் கேட்டு கொண்டதற்கமைய, எம்பிலிபிட்டிய நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில், மாட்டிறைச்சி விற்பனையை, முழுமையாகத் தடை செய்வதற்கு தாம் ஆதரவை வழங்குவதாகவும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய எம்பிலிபிட்டிய நகர சபை பிரதேசங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கோ, மாடுகளை வெட்டுவதற்கோ தான் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என்றும் தெரிவித்தார்.

Comments