அட்டாளைச்சேனை பிரதேச சபை; சீட்டுக் குலுக்கலில் மு.கா. வென்றது

🕔 March 28, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் கைப்பற்றிக் கொண்டது.

மு.காங்கிரஸ் சார்பில் ஒலுவில் பிரதேசத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர் எம்.ஏ. அமானுல்லா தவிசாளராகியமையினை அடுத்து, சபையை மு.கா. கைப்பற்றிக் கொண்டது.

இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதல் அமர்வு இடம்பெற்றது.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளராக மு.கா. சார்பில் அமானுல்லா பிரேரிக்கப்பட்டார். எதிரணி சார்பில் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். ஜௌபர் என்பவரை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் பிரேரித்தார்.

எனவே, இவர்கள் இருவரில் யாரை தவிசாளராகத் தெரிவு செய்வது என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, திறந்த முறையில் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தவிசாளராகப் பிரேரிக்கப்பட்டவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியின் 08 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதேவேளை, முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக வாக்களிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சார்பான பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதனடிப்படையில் மு.கா.சார்பில், தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டவர் 09 வாக்குகளைப் பெற்றார்.

மறுதரப்பில் தேசிய காங்கிரஸ் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவருக்கு ஆதரவாக அவர் சார்ந்த கட்சியின் 06 வாக்குகள் கிடைத்த அதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 03 உறுப்பினர்களின் வாக்குகளும் கிடைத்தன.

இதனடிப்படையில் தேசிய காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டவரும் 09 வாக்குகளைப் பெற்றார்.

ஆகவே, தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றமையினை அடுத்து, சீட்டுக் குலுக்கல் மூலம் தவிசாளரை தெரிவு செய்வதென முடிவு செய்யப்பட்டது.

இதற்கிணங்க, சீட்டுக் குலுக்கல் இடம்பெற்றபோது, அதில் முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த அமானுல்லா வெற்றி பெற்று, தவிசாளராகத் தெரிவானார்.

இதேவேளை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக தேசிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.எஸ். ஜௌபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மு.காங்கிரஸ் சார்பில் பிரதித் தவிசாளர் பதவிக்கு தமிம் ஆப்தீன் பிரேரிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பிரதித் தவிசாளர் பதவிக்கான நபரும், சீட்டுக் குலுக்கல் மூலமே தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை பிரதேச சபை இன்று கூடுகிறது; தவிசாளர் பதவி, மு.கா.வுக்குச் செல்லலாம்

Comments