பாலமுனையில் ஹக்கீம் கலந்து கொள்ளவிருந்த பிரசார மேடைக்கு அருகில் மோதல்; பலர் காயம்

🕔 January 14, 2018

– மப்றூக் –

பாலமுனை பிரதேசத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசின் பிரசாரக் கூட்டத்துக்கு அருகாமையில் இரண்டு தரப்பினருக்கு இடையில், சற்று முன்னர் கை கலப்பு ஏற்பட்டுள்ளது.

மு.காங்கிரசின் ஆதரவாளர்களுக்கும், மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே இந்தக் கை கலப்பு இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

இந்த சம்பவத்தில் இரண்டு தரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடுபவருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் குறித்து, முஸ்லிம் காங்கிரசின் பிரசார மேடையில் ஒருவர் தவறாகப் பேசியமையினை அடுத்தே, இந்த சம்பவம் இடம்பெற்றது.

அன்சில் தொடர்பில் மு.காங்கிரசின் மேடையில் தவறாகப் பேசப்பட்ட போது ஆத்திரமடைந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள், குறித்த மேடை நோக்கிச் சென்ற போதே, அங்கு மோதல் இடம்பெற்றது.

மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் குறித்த மேடை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு, சில மணி நேரங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், மோதல் நடைபெற்றபோது, மு.கா. தலைவர் அங்கிருக்கவில்லை.

எவ்வாறாயினும், தற்போது அங்கு பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.

பிரசாரக் கூட்டம் தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வீடியோ

Comments