இரண்டிலாவது வெல்லாது விட்டால், பதவி துறப்பேன் என்று கூற வேண்டும்; மு.கா. தலைவருக்கு அன்சில் சவால்

🕔 January 9, 2018

– அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் மு.காங்கிரஸ் வெற்றி பெறா விட்டால், தனது தலைமைப் பதவியியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முடிந்தால் கூறட்டும் என, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், வேட்பாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் சவால் விடுத்துள்ளார்.

அட்டாளைச்சேனை அறபா வட்டாரத்தில், மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மனாப் தலைமையில், இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, இந்த சவாலை அன்சில் விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

ஒரு கால கட்டத்தில் அப்போது முஸ்லிம்கள் வசமிருந்த 06 உள்ளுராட்சி சபைகளில், ஒன்றிலேனும் மு.காங்கிரஸ் தோற்று விட்டால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வேன் என்று, மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் சவால் விடுத்தார், அதில் தோற்றுப் போனார். அதனையடுத்து, அவர் கூறியவாறே நாடாமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்தும் காட்டினார்.

ஆனால், ரஊப் ஹக்கீம் அப்படி பெரிய சவால்களையெல்லாம் விடத் தேவையில்லை. இப்போது அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமிருக்கும் 08 உள்ளுராட்சி சபைகளில், 02 சபைகளிலேனும் அவரால் வெற்றி பெற முடியும் என்று, முடிந்தால் அவர் சவால் விடுக்கட்டும். அதில் அவர் தோற்றுப் போனால், அவருடைய தலைமைப் பதவியை அவர் ராஜிநாமா செய்வேன் என்று கூறவும் வேண்டும்.

ரஊப் ஹக்கீமால் அவ்வாறு சவால் விடுக்க முடியாது. அவருக்கு அந்தளவு தைரியமும் கிடையாது, அவருக்கு சாதகமான நிலைவரமும் இங்கு கிடையாது” என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள 08 உள்ளுராட்சி சபைகளில், 05 சபைகளை கடந்த முறை மு.காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.

இந்த நிலையில்தான், இரண்டு சபைகளையாவது இம்முறை மு.காங்கிரஸால் கைப்பற்ற முடியாது எனும் பொருட்பட, அன்சில் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்