இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது சமஷ்டிதான்: சம்பந்தன் தெரிவிப்பு

🕔 November 26, 2017

புதிய அரசியல் யாப்பில் உள்ள அதிகாரப் பகிர்வு சமஷ்தான் என, எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எமது தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய அதிகாரம், சட்டத்தை ஆக்கும் அதிகாரம், அதுவும் நிர்வாக அதிகாரம், எமது கைகளில் இருக்குமாக இருந்தால், அந்த அதிகாரத்தை மத்திய அரசு மீளப் பெற முடியாததாக இருந்தால், அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்த முடியாததாக இருந்தால், அதுதான் உள்ளக சுய நிர்ணய உரிமையாகும். அதுதான் சமஷ்டியாகும். இடைக்கால அறிக்கையிலும் இதுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையில் மறைமுகமான சமஷ்டித் தீர்வு தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பின்னர் நாடு பிளவுபடும் என்றும் மஹிந்த ராஜபக்ஷவும் சில சிங்கள அமைப்பினரும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

புதிய அரசியலமைப்பில் ‘ஒற்றையாட்சி’, ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற பதங்கள் இருக்காது. அதற்குப் பதிலாக ‘ஏக்கிய ராஜிய’ என்ற பதம் காணப்படும். ‘ஏக்கிய ராஜிய’ என்பதற்கு ‘பிரிபடாத’, ‘பிரிக்க முடியாத’ ஒருமித்த நாடு எனும் விளக்கம் கொடுக்கப்படும். பிரதேச ரீதியாக நாட்டின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அது அமையும்.

அதனையொட்டி மத்திய அரசினால் மாகாணத்துக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படும். அதுவே சமஷ்டி என்பதன் குணாதிசயமாகும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்