தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர்

🕔 November 5, 2017

– அஷ்ரப் ஏ சமத் –

“பள்ளிவாசல் என்பது  ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து,  தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை  கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என்று, உடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்தார்.

கொழும்பு  கிருலப்பனை  ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும்  கிருலப்பனை  பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் ஏற்பாட்டில், இலவச மருத்துவ முகாமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல், பி.பகல் 04.30 மணிவரை நடைபெற்றது.

இந்த வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

குறித்த மருத்துவ முகாமில் இப்பிரதேசத்தில் வாழும் மூவின மக்களும் கலந்து  கொண்டனர்.

தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றம் 25க்கும் மேற்பட்ட முஸ்லீம், சிங்கள மற்றும் தமிழர் சமூகங்களைச் சேர்ந்த வைத்தியர்கள்  இணைந்து 500க்கும் மேற்பட்ட நோயாளிகளை பரிசோதனை செய்து அவா்களுக்கு இலவச சிகிச்சைகளையும்  மருந்துகளையும் வழங்கினர்.

இந் வைத்தியமுகாமுக்கு  ரிச்சாட் பீரிஸ் நிதிக் கம்பணியின்  நிறைவேற்றுப் பணிப்பாளர்  கே.எம். எம். ஜபீா் அனுசரனை வழங்கினார்.

மேற்படி வைத்திய முகாம் ஆரம்ப நிகழ்வில் ராஜாங்க அமைச்சா்  ஏ.எச்.எம் பௌசி, உடுவே தம்மாலோக தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள், கிறிஸ்தவ மற்றும் இந்து மதத் தலைவா்கள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இங்கு கூறுகையில்;

“இந்த பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்கிடையே எவ்வித  மத வேறுபாடுகள்,  இனரீதியான செயற்பாடுகள் இதுவரை நடைபெறவில்லை.  இங்கு வாழும் சகல சமுகங்களும் அந்நியோன்யமாகவும்  புரிந்துணா்வு மற்றுமு் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்