தெல்கமுவ ஓயாவில் மூழ்கிய 06 பேரின் சடலம் மீட்பு; இருவரைத் தேடும் பணி தொடர்கிறது

🕔 November 5, 2017

– க. கிஷாந்தன் –

மாத்தளை – தெல்கமுவ ஓயாவில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற் போன எட்டு பேரில் ஆறு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை – தெல்கமுவ  ஓயாவில் நேற்று மதியம் குளித்துக்கொண்டிருந்த போது, 08 பேர் நீரில் அடிச்செல்லப்பட்டனர்.

நீர்க்கொழும்பு நாத்தாண்டி பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டனர்.

சுற்றுலா மேற்கொண்டு, வெள்ளிக்கிழைமை மாத்தளைக்கு  வருகை தந்தவர்களில் எட்டு பேரே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை ஐந்து பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறுமியின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து நான்கு கிலோமீற்றர் தொலைவில் மேற்படி சிறுமியின் சடலம் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  மேலும் நீரில் மூழ்கிய மேலும் இருவரை மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மழை காரணமாக, மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்புப் பணியில், விசேட அதிரடிப்படை, கடற்படையின் சுழியோடி பிரிவினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகினறனர்.

நக்கில்ஸ் மலைத் தொடரில் பெய்துவரும் அதிக மழையின் காரணமாக, ஆற்றின் நீர் மட்டடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் பெயர்கள் வருமாாறு;

கிங்சிலி ரத்நாயக்க  (வயது – 40), சந்திராகாந்தி (வயது –  59), வினுக்கி ரத்நாயக்க  (வயது – 13), ஹிருனி ரத்நாயக்க (வயது –  4), ரவிந்திர லசந்த (வயது – 39), ருவனி டில்ருக்ஷி  (வயது – 38), ரிஷாதி வீகிஷா (வயது –  12), சந்துனி (வயது – 12).

Comments

புதிது பேஸ்புக் பக்கம்