20 ஆவது திருத்தம் கை நழுவிப் போனமையினை அடுத்து, ஜனாதிபதி – பிரதமர் தீவிர ஆலோசனை

🕔 September 16, 2017

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாயின் சர்வஜன வாக்கெடுப்பினைநடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளமையினை அடுத்து எழுந்துள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, நேற்று வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றிரவு 9.00 மணி முதல் 10.30 வரை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரச உயர் மட்டத்தரவர்களும் பங்கேற்றிருந்தனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சியிலும், 20ஆவது திருத்த நடவடிக்கைகளிலும் சம்பந்தப்பட்டவர் எனும் வகையில், இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொண்டார்.

உச்ச நீதிமன்றின் அறிவித்தல்  வெளியாகியுள்ள நிலையில், கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை நடத்துவது பற்றி, இதன்போது ஆராயப்பட்டதாகத் தெரியவருகிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அனுசரித்து, அதேவேளை புதிய முறையீடுகள் மற்றும் மாற்றங்கள் மூலம், மீண்டும் ஒரு முறை 20ஆவது திருத்தத்தை வேறு வடிவில் சமர்ப்பித்து சர்வஜன வாக்கெடுப்பின்றி விடயத்தை நகர்த்தலாமா என்ற ஒரு கேள்வி, நேற்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

ஆயினும், அது நடைமுறைச்சாத்தியமற்றது என்பதால், அத்தகைய முயற்சி எதனையும் எடுப்பதில்லை என்று உறுதியாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

எனவே, இனி நடத்த வேண்டிய மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் என்போது நடத்துவது, உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரா பின்னரா என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாகவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்