மியன்மார் மனிதப் படுகொலைகளைக் கண்டித்து, சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டப் பேரணி

🕔 September 15, 2017

– எம்.வை.அமீர், யூ.கே. காலிதீன்-

மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்ய மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனப்படுகொலையைக் கண்டித்து, சாய்ந்தமருதில் இன்று வெள்ளிக்கிழமை கண்டனப் பேரணியொன்று இடம்பெற்றது.

மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த முஸ்லிகள் மீது நடத்தப்படும் அத்துமீறிய காட்டுமிராண்டித்தனமான கொடூரமான கொலைகள், வன்புணர்வுகள் மற்றும் துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தக்கோரி இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், மனிதாபிமானத்துக்கு எதிரான செயற்பாடுகளை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மியன்மார் அரசாங்கத்துக்கும், அந்த நாட்டின் ஆளுங்கட்சித் தலைவி சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூகிக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இங்கு வேண்டப்பட்டது.

இன்று ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில் கலந்து கொண்டோர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபாவிடம் மேற்படி கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றினையும் சமர்ப்பித்தனர்.

சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் வை.எம். ஹனிபா தலைமையில் இந்த கண்டனப் பேரணியும், மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

பேரணியின் போது கொலைகளை நிறுத்து, ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு சுயாட்சியை பெற்றுக்கொடு, ஆங் சாங் சூகியின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பறிமுதல்செய், ஐ.நா வே மியன்மார் மக்களை கண்திறந்து பார் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் பாததைககளும் ஏந்தப்பட்டன. நிகழ்வின் இறுதியில் மியன்மார் மக்களுக்கு ஈடேற்றம் கோரி பிராத்தனையும் இடம்பெற்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்