கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது

🕔 August 18, 2017

– முஸ்ஸப் –

ணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு இந்த நிதியினை வழங்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட பொதுமக்களில் நூற்றுக் கணக்கானோர் திடீர் சுகயீனமுற்றனர். இந்த நிலையில் அவர்கள் இறக்காமம், அக்கரைப்பற்று, கல்முனை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

ஆயினும் அவர்களில் இறக்காமத்தைச் சேர்ந்த நான்கு பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் பொறியியலாளர் மன்சூரின் வேண்டுகோளுக்கிணங்க, முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா; சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவை, இறக்காமம் பிரதேசத்துக்கு அழைத்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கச் செய்தார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக உறுதியளித்த அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க; மேற்படி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு நிதியினை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.

இதற்கமையவே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதிகள், நேற்றைய தினம் வழங்கப்பட்டன.

இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய நிகழ்வில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி மற்றும் வலுவூட்டல் பிரிவின் பணிப்பாளர் டப்ளியு.ஏ.எல். லங்காதிலக மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி ஆணையாளர் அனுருத்த பியதாஸ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உயிரிழந்தவர்கள் நான்கு பேரின் குடும்பத்தவர்களுக்கும் வீடுகளை நிர்மாணிப்பதற்கென, தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவினூடாக மேற்கொண்ட பெரும் முயற்சியின் பலனாகவே, இந்த உதவி கிடைக்கப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்