விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

🕔 August 18, 2017

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு, ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று வியாழக்கிமை காலை, கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

மேற்படி நம்பிக்கையில்லா பிரேரணையினை நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் அசு மாரசிங்க முன் வைத்தார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில், அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக 05 குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் பின்வருமாறு;

  1. அமைச்சரின் நடத்தை, ஐ.தே.கட்சிக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
  2. சில குற்றவியல் வழக்குகளை விசாரிப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
  3. லஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றினைத் தடுப்பதற்குரிய போதுமான சட்டத்தினைக் கொண்டு வரத் தவறியுள்ளார்.
  4. குற்ற முறையாகச் சம்பாதித்த பணத்தினை மீளவும் அரசாங்கத்துக்கு உரித்தாக்குவதற்கான சட்டத்தை கொண்டு வரத் தவறியுள்ளார்.
  5. நீதியமைச்சராக தனது கடமைகளைச் செய்யத் தவறியுள்ளார்.

Comments