கிழக்கு தேர்தலை பிற்போடுவதில்லை: ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

🕔 August 11, 2017
கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து, ஒரே தினத்தில் 09 மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதென ஐ.தே.க. எடுத்துள்ள தீர்மானத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிப்பதில்லை என அக்கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதன் போது மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட 09 மாகாண சபைகளினதும் கால எல்லையை நீடித்து ஒரே நேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த விடயம் சம்பந்தமாக நேற்றிரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இதன்போது, கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடிப்பதற்கு எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கப் போவதில்லை என்ற தெளிவான தீர்மானம் எடுக்கப்பட்டது.
சு.க. மத்திய செயற்குழு எடுத்த இத்தீர்மானம் தொடர்பில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஐ.தே.க. தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு அக்குழு தெளிவுபடுத்தவுள்ளது.

அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்கின்ற, ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபையை அதன் கால எல்லையை நிறைவடையும் போது கலைத்து விடுவது என்றும், எந்தக் காரணம் கொண்டும் அதற்கு கால நீடிப்பு வழங்குவதில்லை என்றும் இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

இத்தீர்மானமானது பல மணி நேர கலந்துரையாடல்களுக்கு பின்னரே எடுக்கப்பட்டது. ஆகவே, கிழக்கு மாகாண சபையானது உரிய நேரத்தில் கலைக்கப்படும். இது தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரப்படும் போது, அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கையினையும் மேற்கொள்வது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நல்லாட்சி அரசின் பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, மக்கள் ஆணைக்கு எதிராகவோ, ஜனநாயகத்துக்கு எதிராகவோ ஒருபோதும் செயற்பட மாட்டாது. எனவே, கிழக்கு மாகாண சபையை தெரிவு செய்த மக்கள், தமது ஆணையை மீறி  மேலதிகமாக ஒரு நாளை கூட வழங்கமாட்டார்கள். இதற்கு ஒருபோதும் சு.க. ஆதரவாக இருக்காது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்